Header Ads



அகதிகள் கூட்டத்தில் வழி தடுமாறி பாலைவனத்தில் தவித்த 4 வயது 'மர்வான்'

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. கடந்த 3 வருடங்களாக நடந்துவரும் இந்த உள்நாட்டுப் போரில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும், 65 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் அகதிகளாகியுள்ளனர். 

வெளிநாட்டு அகதிகளில் சரிபாதிக்கும் அதிகமான சுமார் 10 லட்சம் மக்கள் அண்டை நாடான ஜோர்டானில் அடைக்கலம் அடைந்துள்ளனர். 

போராளி குழுக்களுடன் சிரியா அரசு ஜெனிவாவில் நடத்திய 2 சுற்று சமாதானப் பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்ததையடுத்து, உயிர் பயத்தில் ஜோர்டானை நோக்கி அகதிகளாக செல்லும் சிரியா மக்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்டான் பாலைவனப் பகுதியில் வழி தடுமாறி தனியாக பரிதவித்துக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை கண்ட ஐ.நா.சபையின் அகதிகள் நல்வாழ்வு அதிகாரிகள் திடுக்கிட்டனர். 

சிரியாவில் இருந்து குடும்பத்தாருடன் ஜோர்டான் செல்லும் வழியில் வழி தவறி, திசை மாறி உறவினர்களை பிரிந்து விட்டதாக கூறிய மர்வான் என்ற அந்த சிறுவனின் கையில் அவனுக்கு தேவையான துணிமணிகள் அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. 

ஜோர்டான் எல்லையை அவன் கடப்பதற்கு உதவிய அதிகாரிகள் விரைவில் அவனை குடும்பத்தாருடன் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த நவம்பர் மாத நிலவரத்தின்படி, வெளிநாடுகளில் வாழும் சிரியா அகதிகளில் 70 ஆயிரம் பேர் குடும்பத் தலைவர்களை இழந்தவர்களாகவும், 3 ஆயிரத்து 700 குழந்தைகள் வரும் வழியில் பெற்றோரை பறி கொடுத்தும், வழி தவறி பிரிந்தும் அனாதைகளாக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது

No comments

Powered by Blogger.