சவுதி அரேபியா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஏற்பாட்டில் இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்
(ஏ.எல்.ஜுனைதீன்)
சவுதி அரேபியா ஜித்தாவிலுள்ள இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IDB) திறமையான நிதி வசதியற்ற இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவதற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகங்களில் விவசாயம் பல்மருத்துவம் பொறியியல் மருத்துவம் மிருக வைத்தியம் ஆகிய பீடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டோர் இன்று 7 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இப்புலமைப் பரிசில்ககளைப் பெறுவதற்காக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 மாணவ மாணவிகள் சமுகமளித்திருந்தனர்.
இப்புலமைப் பரிசில் திட்டம் (2013 – 2014) குறித்து ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.முஹம்மத் நிலையத்தின் செயலாளர் சாஹுல்ஹமீட் முஹம்மத் (முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்) பொருளாளர் ஏ.எஸ்.எம் முஸம்மில் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இப்புலமைப் பரிசில்களைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்படுவோருக்கு வருடத்திற்கு மூன்று முறை ஊதியம் வழங்கப்படும். வருடந்தோறும் நூல்களும் உடுதுணிகளுக்கும் நிதி வழங்கப்படும்.
இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் வட்டியற்ற கடனாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இலகு தவணைகளில் அவை திருப்பிச் செலுத்தப்படல் வேண்டும். கல்வியைப் பூர்த்தி செய்து நல்ல வருவாய் கிடைக்கும் தொழில் கிடைத்த பின் இது திருப்பிச் செலுத்தப்படல் வேண்டும்.
தேவையான மற்றைய மாணவர்களின் எதிர்காலப் பயன்பாட்டுக்காக கடன் பெற்ற மாணவர்கள் இதற்காக உருவாக்கப்பட்ட “டிரஸ்டுக்குப்” பணத்தை மீளச் செலுத்த வேண்டும். என்றனர்.



Post a Comment