சொல்வதெல்லாம் உண்மை..!
(ஏ.எல்.ஜுனைதீன் )
ஆசிரிய கல்விச்சேவைக்கான பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்த தகுதியான ஆசிரியர்களெல்லோரும் கொழும்புக்கு சென்று அவரவர் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளை. கொழும்பிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு புறக்கோட்டை தனியார் பஸ் நிலையங்களிலும் இ.போ.சபை பஸ் நிலையத்திலும் ஏன் புகையிரதத்திலும் நிரம்பிக் காணப்பட்டனர். கல்முனையைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரும் அவர் வழமையாக பயணம் செய்யும் சொகுசு பஸ் வண்டி கிடைக்காமையால் கொழும்பிலிருந்து கல்முனையை நோக்கி பயணம் செய்யும் இ.போ.ச பஸ் வண்டியில் பிரயாணம் செய்ய தீர்மானித்து புறக்கோட்டை பஸ் நிலையத்துக்கு ஆசனப்பதிவுக்காக பி.ப. 4.00 மணிக்கு சென்றிருந்தார். அங்கும் பயணம் செய்ய ஆசனங்கள் இல்லாமையால் அப்பஸ் வண்டியின் நடத்துனரின் அறிமுகத்தாலும்; ஆதரவாலும் சட்டத்தரணிக்கு ஆசனமொன்று கிடைத்தது. சட்டத்தரணி பி.ப. 4.30 மணியளவில் தனக்கு ஒதுக்கப்பட்ட பஸ்வண்டியின் முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். ஓன்றரை மணித்தியாலங்கள் அமர்ந்து கொண்டிருக்க வேண்டுமே வெளியில் இறங்கி நிற்க சிணு சிணு மழை கொட்டிக் கொண்டிருக்கிறதே என்ன செய்வது என யோசித்து தனது பிரயாணப்பையிலிருந்த அப்பிள் ஐ பேட்டை வெளியில் எடுத்து அதில் பதிவாகியிருந்த செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார்.
ஆசனப் பதிவு செய்த பிரயாணிகளும் ஒருவர் பின் ஒருவராக வந்து ஏறிக் கொண்டிருந்தனர். குறித்த நேரத்துக்கு பஸ்வண்டி நிரம்பிய பிரயாணிகளுடன் புறப்பட்டது. அத்தருணம் சட்டத்தரணி தனது ஐ பேட்டை மூடி மீண்டும் தனது பிரயாண பையினுள் திணித்துக் கொண்டார். நின்று கொண்டு பிரயாணம் செய்த வாட்டசாட்டமான ஆசிரியர் ஒருவர் தான் தோழில் போட்டிருந்த பிரயாணப்பையை கழற்றி ஒரு புன்முறுவலுடன் சட்டத்தரணியிடம் நீட்டி அதனை அவரது பிரயாணப்பைக்கு அருகிலுள்ள இடத்தில் வைக்குமாறு வேண்டிக்கொண்டார்.சட்டத்தணியும் அவரின் பையை தனது பிரயாணப்பைக்கு அருகில் வைத்து சேர்த்து பிடித்துக் கொண்டார். குறித்த பஸ் சடுதியாக அதன் பிறேக் பிரச்சினைக்காக நிட்டம்புவ பஸ் டிப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரயாணிகள் பஸ் திரும்பி வரும்வரை அவரவர் கொண்டு வந்த பிரயாணப்பை பொட்டலங்களை பஸ்வண்டியில் வைததுவிட்டு இறங்கி வாசலில் காத்து நிற்கும்படி வேண்டப்பட்டனர். சுமார் 15 அல்லது 20 நிமிடங்களின் பின் பஸ்வண்டியின் பிறேக் திருத்தப்பட்டு வந்ததும் மீண்டும் பஸ்ஸிக்குள் ஏறி அமர்ந்து கொண்டனர் பஸ் வண்டியும்; மீண்டும் புறப்பட்டது.
இரவுச் சாப்பாட்டுக்காக வறக்காபொலை கழிந்து நாங்கல்லை என்னுமிடத்தில் பஸ்வண்டி நிறுத்தப்பட்டது. பிpரயாணிகள் சிலர் பஸ்வண்டியிலிருந்து இறங்கி அருகிலுள்ள ஹோட்டலுக்குச் சென்று தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்ளை அவிழ்த்து சாப்பிடத் தொடங்கினர். இன்னும் சிலர் ஹோட்டலிலுள்ள உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சட்டத்தரணியும் பஸ்ஸிலிருந்து இறங்கி அவசர அவசரமாக சில பிஸ்கட்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் பஸ் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார். பஸ் வண்டியும் 10 அல்லது 15 நிமிடங்களின் பின் புறப்படத் தொடங்கியது. பஸ்வண்டி டம்புல்லையை அண்மித்ததும் அவ்விடத்திருந்து கல்முனை செல்லும் வரை பிரயாணிகள் ஒருவர் இருவராக பஸ்ஸிலிருந்து இறங்க ஆரம்பித்தனர். எவ்வாறாயினும் பஸ் வண்டியின் சன நெருக்கம் குறைந்;த பாடில்லை. பஸ்வண்டி சுமார் காலை 3.00 மணியளவில் கல்முனையை வந்தடைந்தது. சட்டத்தரணியும் பஸ் வண்டியிலிருந்து இறங்கி ஒரு முச்சக்கர வண்டியில் ஏறி அவரது இடத்துக்குச் சென்று விட்டார்.
சட்டத்தரணி மறுநாள் காலை 8.00 மணியளவில் தனது பிரயாணப்பையை திறந்து அதிலிருந்த ஆவணங்களை வெளியிலெடுத்துக் கொண்டிருந்த சமயம் பிரயாணப் பையிலிருந்த தனது ஐ பேட் காணாமல் போயுள்ளதைக் கண்டார்.
சில வேளை நிட்டம்புவ டிப்போவில் பஸ்வண்டியை கராஜுக்கு கொண்டு சென்ற சமயம் கையாடப் பட்டிருக்குமா? அப்படியிருக்காது அல்லது ஹோட்லில் இருந்த சமயத்தில் பஸ்ஸிலிருந்த பிரயாணிகள் எவராவது கையாடியிருப்பார்களா? குறுகிய நேரத்தினுள் அவ்வாறு நடக்க சந்தர்ப்பம் இல்லை. அப்படியானால் எப்படித்தான் நடந்திருக்கும். இவ்வாறு சட்டத்தரணிக்கு ஏகப்பட்ட சந்தேகம்.
சட்டத்தரணியின் சிந்தனை சரியாக தொழில்பட்டது. அவரது ஐ பேட் இரகசிய சொல்லைக் கொண்டது. அதனை இலகுவில் எவரும் கையாள முடியாது. அதனை பெற்ரரி சார்ஜ் பண்ண விசேட இணைப்பு தேவை அதனை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாது.
மேலும் அதில் சமிக்சையும் பொருத்தப்பட்டுள்ளது. தனது வீட்டிலுள்ள கணனியினூடாக அதற்குரிய இரகசிய குறியீட்டைக் கொண்டு பார்க்கும் போது குறித்த ஐ பேட் கந்தளாய் சேருவாவில பிரதான பாதைக்கு அண்மையில் கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு அண்மையில் உள்ள பாடசாலைக் கட்டிடமொன்றில் இருப்பதைத் தெளிவாகக் காட்டியது.
சட்டத்தரணி அதன் அமைவிடத்தை தெளிவாக படமெடுத்து வைத்திருந்ததுடன் அதனை தனக்குத் தெரிந்த தனது ஊரைச் சேர்ந்த முள்ளிப்பொத்தானை முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஒருவர் மூலமாக அவரது அதிபருடன் முள்ளிப் பொத்தானை பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து விடயத்தை விளக்கி பொறுப்பதிகாரியுடன் மேலும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேர்ந்து மொத்தமாக 6 பேர் 25 கி.மீற்றருக்கு அப்பாலுள்ள ஐ பேட் இருந்த பாடசாலைக்கு சென்றனர்.
குறித்த பாடசாலையை அடைந்ததும் ஐ பேட் இருந்;த அமைவிடத்தை அண்மித்து அங்கிருந்த ஆசிரியருடன் அளவளாவிக் கொண்டிருக்கையில் சட்டத்தரணிக்கு கையடக்கத் தொலைபேசி வாயிலாக வழங்கிய சமிக்கையை அடுத்து சட்டத்தரணி தனது கணனியிலுள்ள சமிக்கையை அழுத்தியதும் மறைத்து வைத்திருந்த ஐ பேட் அலறத் தொடங்கியது.
ஆரம்பத்தில் அலறல் தனது கையடக்க தொலைபேசி என நினைத்து தனது சட்டைப் பையை ஆராய்ந்த ஆசிரியர் பொலிஸ் பொறுப்பதிகாரி அறையிலிருந்த மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐ பேட்டை எடுத்துக் கொண்டு வருகையில் அதிர்ச்சியடைந்தார். சொல்வதென்னவென்று தெரியாமல் வாயைச்சப்பினார்.
நீர் ஒரு அரச உத்தியோகத்தர் நீங்கள் புரிந்த அற்பக்காரியத்திற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை உம்மை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்ட சென்று நீதிமன்றில் ஒப்படைக்கப் போகின்றோம் எனக் கூறி ஐ பேட் சொந்தக்காரரான சட்டத்தரணியிடம் ஆலோசனை கேட்டபோது குறித்த ஆசிரியருக்கு நல்லபுத்திமதி கூறி எச்சரித்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிரியரும் வெட்கித் தலைகுனிந்தவராக தப்பிப் பிழைத்தவராகச் சென்றார்.இவர்களைப் போன்ற ஆசிரியர்களும்; எமது எதிர்கால சந்ததியினருக்கு அறிவு ஒழுக்கம் புகட்டுபவர்களாக அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சிரியம்!
.jpg)
Post a Comment