Header Ads



கத்தாரில் நவீன அடிமைத்துவம் - ஐரோப்பிய பாராளுமன்றம் குற்றச்சாட்டு

வெளிநாட்டுப் பணியாளர்களை அடிமைகளாக நடத்தும் கத்தர் நாட்டுச் சட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என அங்கு விசாரணை நடத்திய சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

கத்தர் நாட்டில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைப் பற்றி விசாரிப்பதற்காக சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பினைச் சார்ந்த பிரதிநிதிகள் நான்கு நாட்கள் பயணமாக கத்தருக்கு சென்றனர். பயண முடிவில் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள தகவலில், கத்தர் நாட்டில் வெளிநாட்டுப் பணியாளர்களின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், வேலை மற்றும் வாழ்க்கை நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை நீடிக்குமானால் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னராக ஏறத்தாழ 4000 பணியாளர்கள் பலியாகி விடுவர் என அவர்கள் எச்சரித்துள்ளனர். கத்தரில் கபாலா என்ற திட்டத்தின் அடிப்படையில் வேலைக்கு வெளிநாட்டினைச் சார்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி கத்தர் நாட்டினைச் சார்நத முதலாளிதான், பணியாளர்களின் விசா மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இதனை தவறாகப் பயன்படுத்தும் முதலாளிகள் சம்பளத்தினைக் கொடுக்காமலும், சொந்த நாட்டிற்கு பணியாளர்களை அனுப்பாமலும் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

தொழில்துறை நிபுணத்துவம் பெற்றவர்களும், சாதாரணக் கூலித் தொழிலாளிகளும் இவ்வாறான கொடுமைகளுக்கு ஆளாவதாக சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷரன் பர்ரோவ் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் இவ்வாறு அடக்குமுறைக்கு ஆளானால் அங்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியினை நடத்தக் கூடாது என மனித உரிமை அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா நாடாளுமன்றம் இதனை நவீன அடிமைத்துவம் எனக் கடந்த மாதம் குறிப்பிட்டு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கத்தரில் 88 சதவிகிதமானோர் வெளிநாட்டுப் பணியாளர்கள் ஆவர்.

No comments

Powered by Blogger.