Header Ads



உடல் மெலிய வேண்டுமென்பதற்காக சாப்பிடாமல் இருப்பவர்களின் கவனத்திற்கு..!

உடல் இளைக்கவேண்டும் என்ற கவலையில் விருந்து உணவுகளையும், சாக்லேட், கேக் வகைகளையும் தவிர்ப்பவர்களுக்கு ஒரு இனிய செய்தியாக நியூசிலாந்தின் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில் 'அபிடைட்' என்ற இணையதள பத்திரிகையில் உடல் மெலிவதற்காக கேக் துண்டு ஒன்றினை சாப்பிடாமல் வருத்தப்படுபவர்களைவிட அதனை சந்தோஷமாக சாப்பிடுபவர்களே எடை குறைவாக உள்ளார்கள் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கலோரிகளை மட்டுமே கணக்கிட்டு சாப்பிடாமல் இருப்பதைவிடவும், இதுபோன்ற உணவு வகைகளை ருசித்துச் சாப்பிடுவதும் உடல் எடைகுறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறப்படுகின்றது. 

சாப்பிடாமல் பெறும் குற்ற உணர்வே உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டங்களைக் கைவிட்டு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ளத் தூண்டுவதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சாக்லேட் எனும் உணவுப்பொருள் அதன் ருசி, வாசனை மற்றும் அமைப்பின் காரணமாகப் பரவலாக அனைவராலும் விரும்பப்படுகின்றது. ஆனால் அதில் உள்ள கொழுப்பு சத்துகளினாலும், சர்க்கரை அளவினாலும் உடல் எடை கூடுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. 

இருப்பினும், இதனை அனுபவிக்கவேண்டிய ஒரு பரிசு என்று எண்ணி சந்தோஷமாக உண்ணுவதும் நீண்டகால எடைகுறைப்புத் திட்டங்களுக்கு உதவக்கூடிய ஒரு விஷயமாகும் என்று ஆய்வினை நடத்திய டாக்டர் ரோலின் குய்ஜர் மற்றும் ஜெசிகா பாய்ஸ் தெரிவிக்கின்றனர். 

18 முதல் 86 வயதுடைய 300 பேரிடம் அவர்களின் உணவுப்பழக்கங்களையும், சாக்லேட் உண்ணும் விருப்பத்தினையும் ஆய்வாளர்கள் கேட்டு அறிந்துள்ளனர். இவர்களுள் 27 சதவிகிதத்தினர் சாக்லேட் சாப்பிடும்போது குற்ற உணர்வினையும், மற்றவர்கள் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் சாக்லேட் சாப்பிடாமல் குற்ற உணர்வினைப் பெறுபவர்களுக்கும் எடை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.