Header Ads



ஆலமர குடும்பத்தின் ஆனந்த ரகசியம்..!

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என, உறவுக்கூட்டுக்குள் ஒன்றாக வாழ்ந்து களித்த, நம் பாட்டன், பூட்டனின் கடந்த கால வாழ்க்கை முறை, இன்றைய நவீன யுவதி, யுவன்களில் பலருக்கு எட்டிக்காயாக கசக்கிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு "குட்பை' சொல்லிவிட்டு, "நான் - நீ, நமக்கு ஒரு குழந்தை' என, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டுவிட்டனர். 

எந்நேரமும் பொருள்தேடி ஓடும் பிள்ளைக்கு, அம்மாவும் - அப்பாவும் கூட, அந்நியர்களாகி போனார்கள். அருகில் வைத்து, பார்த்துக்கொள்வதுகூட பாரமென நினைத்து, அனாதைகளைப் போல, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். வீடு, கார், ஆடம்பர வசதிகள் நிறைந்த வாழ்க்கை என, நிதிசார்ந்த வளங்களில் நிறைவுத்தன்மையை அடைய துடிக்கின்றனர். நிதி தேடுவதில் தவறில்லை. தேடும்போது, குடும்ப உறவுகளையும், அன்பான வாழ்க்கை முறையையும் தொலைத்துவிடக்கூடாது என்கிறார், கோவைப் புதூரைச் சேர்ந்த 95 வயது சுப்புலட்சுமி.இவர், கோவை மாநகராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர். கணவர் காட்டூர் கோபால், மாநில கால்பந்து வீரர். இவர்களுக்கு 12 பிள்ளைகள். கோபால், இரண்டாம் தாரமாக சுப்புரத்தினம் என்பவரை திருமணம் செய்தார்; இவருக்கு 10 பிள்ளைகள். ஆக மொத்தம், 22 பிள்ளைகள். கோபால் மறைவுக்குப்பின் பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் சகிதமாக, மாபெரும் பட்டாள உறவுகளின் அன்பான பராமரிப்பில், கவலையின்றி, ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தற்போது, சுப்புலட்சுமி குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 195 பேர்! இவர்களில் 150 பேர், கோவை, தெலுங்குபாளையத்திலுள்ள கிளப்பில் நேற்று குடும்பத்துடன்கூடி களித்து மகிழ்ந்தனர். மியூசிக் சேர், பாட்டு, நடனம், கேரம் போட்டி என, நேற்றைய பொழுதை கலகலப்பாக களித்தனர்.

மாபெரும் குடும்பத்தின் தலைவி சுப்புலட்சுமி கூறியது:எனது கணவர் கோபாலுக்கும் எனக்கும் 1939ல் திருமணம் நடந்தது. "ஜாதகப்படி இருதாரம் இருக்க வேண்டும்' என்ற ஜோதிட நம்பிக்கை காரணமாக, எனது உடன்பிறந்த சகோதரி சுப்புரத்தினத்தையே, 1942ல், எனது கணவருக்கு, இரண்டாம் தாரமாக மணம் முடித்து வைத்தேன். பாகுபாடு இல்லாமல், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்தோம். எனக்கு 6 ஆண் மற்றும் 6 பெண் குழந்தைகள். எனது தங்கைக்கு 2 ஆண் மற்றும் 8 பெண் குழந்தைகள். கணவர் கோபால், 1970ல் இறந்தார். திருமணம் ஆகாத நிலையில் இரண்டு ஆண், மூன்று பெண் பிள்ளைகள் இறந்தனர்.மற்ற 17 பேருக்கும் திருமணமாகி 73 பேரன், பேத்திகளும், அவர்களுக்கு பிறந்த கொள்ளுப்பேரன் பேத்திகள் என, 195 பேர் எங்கள் குடும்பத்தில் உள்ளனர். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கோவை, சென்னையிலும்; மலேசியா, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளனர். அவர்களில், துபாய், அமெரிக்காவில் வசிப்பவர்களை தவிர, 150பேர், இன்று ஒன்று கூடியுள்ளோம். ஒரு வயது கொள்ளுப்பேத்தி, எங்கள் பெரிய குடும்பத்தின் புதுவரவு. கடந்த 13 ஆண்டுகளாக, கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் ஒன்று கூடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்று, மிக சந்தோஷமான நாள்.

நான், இன்றைய இளம் தலைமுறையினருக்கு, ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கூட்டுக்குடும்பமாக வாழுங்கள்; குடும்பத்துக்கு பலம் சேர்க்கும்; ஏதாவது ஒன்றில் தோல்வியடையும்போது தைரியம் சொல்வார்கள்; தேற்றுவார்கள். விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். பெரியவர்கள் வீட்டில் இருந்தால், இளம்வயதினர் தவறு செய்ய தயங்குவார்கள். குடும்பத்தின் பாதுகாவலர்களாக பெரியவர்கள் இருப்பார்கள். படித்து முடித்து திருமணமானதும், தனிக்குடித்தனம் செல்லாமல், குடும்பத்தினரை அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். வேலை விஷயமாக வெளியிடங்களில் வசித்தாலும், அடிக்கடி உறவினர்களை, குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க பழகுங்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்தால், உங்களுக்கும் ஆயுசு நூறு. வாழ்க்கையை ஓட்டாதீர்கள்; ரசித்து வாழுங்கள். எனது குடும்பத்தைப் போன்று, உங்களின் குடும்பத்திலும் உறவுகள் பெருகும்; ஆனந்தம் ஆர்ப்பரிக்கும்.இவ்வாறு, சுப்புலட்சுமி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.