Header Ads



ஈரானின் தலைநகரத்தை மாற்றுவதற்கு திட்டம்

(Tn) ஈரான் தலைநகரை டெஹ்ரானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் பரிந்துரைக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. சனநெரிசல் நிறைந்த டெஹ்ரானில் இருந்து அரச செயற்பாடுகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஈரான் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பரிந்துரைக்கு 214 பிரதிநிதிகளில் 110 பேர் ஆதரவாக வாக்களித்ததாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான 'இர்னா' குறிப்பிட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி தலைநகருக்கு பொருத்தமான இடம் பற்றி ஆய்வு மேற்கொள்ள அது குறித்த கவுன்ஸிலுக்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பிரேரணையில் குறிப்பிட்டு எந்த நகரங்களும் பரிந்துரைக்கப்படவில்லை. ஈரானின் மத்திய மற்றும் மேற்கு நகரங்கள் பல தலைநகருக்கு பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது. 

'ஈரானின் தற்போதைய தலைநகரின் மக்கள் தொகை 12 மில்லியனாக இருப்பதை தலைநகர் மாற்றத்திற்கு ஆதரவானோர் வாதிடுகின்றனர். டெஹ்ரானில் அதிக வாகன நெரிசல், சூழல் மாசு, பூமியதிர்ச்சி அபாயம் ஆகிய விடயங்கள் தலைநகர் மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

எனினும் சபாநாயகர் அல் லர்ஜானி, இந்த திட்டத்தின் அதிக செயலை காரணம் காட்டி அதனை நிராகரித்துள்ளார். அதிகாரம் மிக்க பாதுகாவலர் கவுன்ஸிலும் இந்த திட்டத்தை நிராகரித்துவிட வாய்ப்பு இருப்பதாக கூறினார். தலைநகரை மாற்றும் திட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. 

1979 புரட்சிக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மன்னர் மொஹமத் ரிசா பெஹ்லாவியும் இது குறித்து ஆலோசித்திருந்தார். அப்போது தலைநகர் முன்னாள் சோவியட் ஒன்றியத்திற்கு அருகில் இருக்கும்படியால் அதனை வேறு இடத்திற்கு மாற்றும்படி மன்னருக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கி இருந்தது.

முதலாவது உலக மகா யுத்தத்தின்போது ரஷ்யா மற்றும் பிரிட்டன் படைகள் நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்ததையடுத்து தலைநகரை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

No comments

Powered by Blogger.