Header Ads



அம்பாறை மாவட்ட அரசியல் வாதிகளின் கவனத்திற்கு (படங்கள் இணைப்பு)


(ஏ.எல்.ஜுனைதீன்) 

    காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி ஆற்றுப் பாலத்தை  உயர்த்தி இப் பாலத்தினூடாக மழை பெய்து வெள்ளப் பெருக்கு எடுக்கும் காலத்தில்கூட சிரமமின்றி போக்குவரத்துச் செய்யக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கு   மாவட்ட அரசியல்வாதிகள் கட்சி பேதங்களை மறந்து  ஒன்றுபட்டு உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பிரதேச  மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் இப்பாலம் முற்றாக நீரில் மூழ்கி பிரதான இப்பாதையால் மக்கள் போக்கு வரத்து செய்ய முடியாமல் பல கஷ்டங்களையும் அபாயங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றனர். 

அதேநேரம் இப் பாதையிலுள்ள பெரிய பாலத்தை ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடியவாறு அகலமாக்க வேண்டும் என்றும் இப் பிரதேச மக்களால் வேண்டுகோளும் விடுக்கப்படுகின்றது.

    இப் பாலங்கள் இரண்டும் மிகவும் குறுகியதாகவும் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் பயணிக்க முடியாமலும் உள்ளன. இதுமாத்திரமல்லாமல் மழை பெய்யும் காலங்களில்   மாவடிப்பள்ளி ஆற்றுப்பாலம்  (சிறிய பாலம்) வெள்ள நீரில் அப்படியே மூழ்கி பாதையில் வாகனப் போக்கு வரத்துச் செய்ய முடியாத நிலையும் அடிக்கடி ஏற்படுகின்றது. இதனால் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இப்பாதையினூடாக போக்கு வரத்துச் செய்வதற்கு பல சிரமங்களை அனுபவிப்பதுடன் உயிர் ஆபத்துக்களையும் எதிர் நோக்குகின்றனர். 

இப்பாதை அகலம் குறைந்ததாக இருப்பதனாலும் இரவு நேரங்களில் இத்தெருவில் வெளிச்சம் இல்லாததனாலும்  வேகமாக பயணிக்கும் வாகனத்தால் துவிச்சக்கர வண்டிகளில் செல்லும் அப்பாவிகள் பலர் இப்பாதையில் அடிபட்டு மரணமடைந்த சம்பவங்கள் உண்டு.எனக் கூறும் இப் பிரதேச மக்கள் இச் சிறிய பாலத்தை உயர்த்துவதுடன் மாவடிப்பள்ளி எல்லையிலிருந்து  காரைதீவு சந்தி வரையும் உள்ள வீதியும் அகலப்படுத்தப்பட்டு உயர்த்தப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றனர்.

    கல்முனையிலிருந்து அம்பாறைக்கும் அம்பாறையிலிருந்து கல்முனை, காத்தான்குடி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களுக்கும் நாளாந்தம் பல நூற்றுக் கணக்கான லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலங்களினூடாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

  நாட்டில் எத்தனையோ பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் இப் பாலங்கள் பற்றி அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் சிந்திக்காமல் இருப்பது ஏன்? இப் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட வேண்டியது இப் பிரதேச மக்களுக்கு அவசியமான சேவை அல்லவா? அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளே இக் குறைபாட்டை நிவர்த்திப்பதற்கு ஒன்று பட்டு  செயல்படமாட்டீர்களா? என இப் பிரதேச மக்கள் அரசியல்வாதிகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.    



No comments

Powered by Blogger.