அரபுலகம் இலங்கைக்கு எதிராக திரும்பக் கூடிய அபாயம் உள்ளதா..?
ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு இரட்டை வியூகம் வகுத்துள்ள இலங்கை அரசு, அங்கத்துவ நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான காய்நகர்த்தல்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான தூதுக்குழுக்களை வெளிநாடுகளில் களமிறக்கி இராஜதந்திர சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ள அரசு, இதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமது வெளிநாட்டுத் தூதர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. அரசின் இந்த இரட்டை வியூகத்தின் ஓரங்கமாக ஜனவரி நடுப்பகுதியில் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகள், ஆபிரிக்கா, அரபு நாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் அந்த நாட்டு வெளிவிவகாரக் குழுவினருடன் முக்கிய சந்திப்புகளை நடத்தி இலங்கையின் தற்போதைய நிலவரங்களை தெளிவுபடுத்தவுள்ளனர்
அரபுநாடுகள் இதற்கிடையில், அரபுநாடுகளைப் பொறுத்தமட்டில் சவூதி, கட்டார், குவைத் போன்ற நாடுகள் அமெரிக்க சார்புடைய நாடுகளாக இருந்தபோதிலும் கடந்தமுறை இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டன. மலேசியா, ஜோர்தான் ஆகிய நாடுகள் மதில்மேல் பூனைபோல் நடுநிலை வகித்தன.
எனினும், இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதால் இலங்கைக்கு எதிராக இம்முறை அரபுலகம் திரும்பக் கூடிய அபாயம் இருக்கின்றது. எனவே இவற்றின் ஆதரவை உறுதிப்படுத்தவேண்டிய தேவைப்பாடு அரசுக்கு இருக்கின்றது. இதன் நிமித்தமே அரபுலகுடன் பேச்சுகள் இடம்பெறவுள்ளன. மேற்படி நாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் குழாமில் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் இடம்பெறவுள்ளனர்.
மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தமட்டில் கியூபா, ஈக்குவடோர் ஆகிய நாடுகளைத் தவிர மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்குச் சார்பான போக்குக் கொண்டவையல்ல. மனித உரிமைப் பேரவையில் 47 அங்கத்துவ ஆசனங்களில் 8 இடங்கள் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாடுகளுக்கு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடைமுறைகளை விளங்கப்படுத்துவதன் மூலம் அவற்றை தனக்கு சார்பான நிலை எடுக்க வைக்கவே இந்த இராஜதந்திர நகர்வுகளை இலங்கை மேற்கொள்ளவுள்ளது.

Post a Comment