Header Ads



பொதுச் சந்தை நடைபாதை வியாபாரிகளுக்கெதிராக சட்டநடவடிக்கை

(எ.ஜே.எம்.சாலி)

திருகோணமலை பொதுச்சந்தையில்  வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்யாது  நடைபாதையில் வியாபாரம் செய்வதற்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு  நகரசபை தீர்மாணித்துள்ளதாக நகரசபை  அறிவித்துள்ளது.

திருகோணமலை நகரசபையானது பொதுச்சந்தையில் அமைந்துள்ள கடைகளை அங்கு ஏற்கனவே  வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு வாடகைக்கு வழங்கி இருந்தது. வியாபார நிலையங்களை வழங்கும் போது அவர்களுக்கு கடையுடன் அமைந்துள்ள முன்பகுதியில் இரண்டு அடி அளவிற்குள் தங்களது வியாபாரப் பொருட்களை பரப்பி வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தது.ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடைகளை மூடி வைத்து விட்டு பொதுமக்கள் நடக்கும் வழிப்பாதைகளில் பொருட்களை பரப்பி வியாபாரம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும்  சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த நடவடிக்கையை நிறுத்துமாறும் தங்களது வியாபாரத் தளங்களில்  வியாபாரங்களை மேட்கொள்ளுமாறு நகரசபை பல தடவைகள் வலியுறுத்தியும் வியாபாரிகள்  கவனத்தில் கொள்ளவில்லை. இதன் அடிப்படையில் கடந்த 20 ஆந் திகதியுடன் மேற்படி நடைபாதை கடைகளை அப்புறப்படுத்துமாறும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும் வியாபாரத் தளங்களுக்கான வாடகை நிலுவைகளையும் இம்மாதம் 3௦ ஆந் திகதிக்குள் செலுத்துதல் வேண்டும் என்றும் நகரசபை கோரியுள்ளது.

ஆனால் இன்று வரையும் வியாபாரிகள் நகரசபையின் அறிவித்தலை கவனத்தில் எடுக்காது தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தாங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் உள்ள சுவர்களில் தமிழிலும் சிங்களத்திலும் மேற்படி சுவரொட்டி ஒட்டப்பட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்காது தங்களது வியாபரத்தை மேற்கொள்ளும் இவர்களின் நடவடிக்கை நேர்மையற்றதென சந்தைக்கு வரும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.மேலும் தங்களது மரக்கறி வகைகளை நடைபாதையில் குவித்து துப்பரவு செய்வதும் பொதுமக்கள் தாங்களே ஒதுங்கிப் போகும் அளவிற்கு சந்தை நிலவரம் உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சந்தைக்குள்ளே முச்சக்கர வண்டித் தரிப்பிடம் ஒன்றுள்ளது பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கே இடம் போதாத நிலையில் இவர்களின் இந்த அத்துமீறிய செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது.எனவே விரைவாக இந்த நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் இலகுவாக தமது சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி செய்திடல் வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

No comments

Powered by Blogger.