Header Ads



பருமன் எனும்...!

(ஆர்.வைதேகி)

இளைஞர்களில் 17 சதவிகிதத்தினரும், பெரியவர்களில் 35 சதவிகிதத்தினரும் சராசரியை விட அதிக எடையுடன் இருக்கிறார்கள். 15 சதவிகித  இளைஞர்களும், 25 சதவிகித பெரியவர்களும் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளி விவரம். ‘‘எடை கூடுவதால் மூட்டு வலி,  இளவயது மாரடைப்பு, குழந்தையின்மை, புற்றுநோய் அபாயம், நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம்.

கொழுப்பு, இனிப்பு, கார்போஹைட்ரேட் தவிர்த்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம், கட்டாய உடற்பயிற்சி போன்றவைதான் எடைக்கட்டுப்பாட்டுக்கான  அடிப்படையான, அவசியமான ஆலோசனைகள். ஆனாலும் சிலருக்கு இந்த எதுவும் பலனளிக்காமல், எடை குறையாமல் இருக்கும். அவர்களுக்கெனவே  சில பிரத்யேக அறுவை சிகிச்சைகள் வந்திருக்கின்றன’’ என்கிறார் இரைப்பை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான நேஹா. அப்படி  சிலவற்றைப் பற்றி விளக்கமாகவும் பேசுகிறார்.

‘‘கேஸ்ட்ரிக் பேன்டிங் - வயிற்றின் மேல் பகுதியில் பிவிசி பேன்ட் கட்டி, வயிற்றின் அளவைக் குறைக்கும் சிகிச்சை இது. இந்த சிகிச்சையை  மேற்கொள்கிறவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவு உள்ளே செல்லாது. ஒரு கவளம் அதிகமானாலும், வாந்தி எடுக்கும் உணர்வு  உண்டாகும். இந்த சிகிச்சையை மேற்கொண்டால், அவ்வப்போது, மருத்துவரை சந்தித்து, உள்ளே கட்டியிருக்கும் பேன்டை, அட்ஜஸ்ட் செய்து கொள்ள  வேண்டியிருக்கும். ஒரு முறை பொருத்திக் கொண்டு, அப்படியே மறந்து போகலாம் என நினைப்பவர்களுக்கு இது சரிவராது.

அடுத்தது ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி. இதில் பிரத்யேக ஸ்டேப்ளர்ஸ் போட்டு, வயிற்றின் அளவு சிறிதாக்கப்படும். முந்தைய அறுவையில் அடிக்கடி  மருத்துவரிடம் சென்று அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னது, இந்த சிகிச்சையில் கிடையாது. கிட்டத்தட்ட நிரந்தர சிகிச்சை  மாதிரியானது. இதைச் செய்வதற்கான நேரமும் குறைவு. இந்த அறுவைக்குப் பிறகு 30 முதல் 80 கிலோ வரை எடை குறைந்தவர்கள் உண்டு.  இந்தியாவில் சமீப காலமாக இந்த அறுவை சிகிச்சைக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

இந்த அறுவை சிகிச்சை பின் விளைவுகளை ஏற்படுத்துமா என்கிற பயம் பலருக்கும் உண்டு. அறுவைக்குப் பிறகான முதல் சில நாள்களில்,  ஸ்டேப்ளர்ஸ் போடப்பட்ட இடங்களில் லேசான கசிவு இருந்ததாக சொல்லப்பட்டதை அடுத்து, அடுத்தடுத்த நாள்களில் அந்தக் கசிவைத் தடுக்க  சிறப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்பதால் பயம் தேவையில்லை. மூன்றாவது கேஸ்ட்ரிக் பை பாஸ். முந்தைய இரண்டையும் விட  சற்றே சிக்கலான சிகிச்சை இது.

நீரிழிவு, ஹைபர் டென்ஷன், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுடன், உடல் பருமனும் உள்ளவர்களுக்கு இது சிறந்த சிகிச்சை. சம்பந்தப்பட்ட நபரின்  வளர்சிதை மாற்றக் கோளாறுகளை முறைப்படுத்தவும் உதவும்.  இந்த சிகிச்சைக்குப் பிறகு, கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி 12  போன்ற சத்துக்கள் கிரகிக்கப்படும் தன்மை குறையும் என்பதால் அவற்றுக்கான சப்ளிமென்ட்டுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

நீரிழிவு பாதித்தோரின் எண்ணிக்கை கற்பனைக்கெட்டாத அளவுக்கு அதிகரித்து வருவது நமக்குத் தெரிந்ததே. உடல் பருமன்தான் அதற்கும் ஆரம்பப்  புள்ளி. நீரிழிவிலிருந்தும், இதர நோய்களிலிருந்தும் விலகியிருக்க, உடல் பருமனை உடனே கவனிக்க வேண்டியது அவசியம்...’’ என்கிறார் இரைப்பை  சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான நேஹா.

No comments

Powered by Blogger.