Header Ads



மாற்றுக் கட்சிகள் ஊடாக முஸ்லிம் பிரதி நிதித்துவம் பெறுவது சூதாட்டம் போன்றது

(ஹஸன் அலி  Mp)
அண்மையில் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெறுபேறுகள் கடந்த கலங்களில் எமக்கு தொடர்ந்து வந்த ஆதரவை நிலைநிறுத்திக் கொண்டதாகவே உள்ளது.

எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இறுதிக்கட்ட சவால்கள் அனைத்தையும் நமது வாக்களர்கள் முறியடித்துவிட்டனர். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம் மாவட்டங்களில் எமது அரசியல் உச்சபீட உறுப்பினர் ஐவர் எம்மிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு எம்மை வீழ்த்துவதற்காகவே களமிறக்கப்பட்டனர். அடுத்துக் கெடுக்கும் இந்த உச்சக்கட்டத் துரோகத்துக்குத் துணைபோன அனைவரையும் மக்கள் தோற்கடித்து விட்டனர். இவர்களினால் பெறப்பட்ட வாக்குகளால் இவர்களை களமிறக்கியவர்கள் பலம் பெற்றுக் கொண்டனர். அரசின் நேரடித் தேர்வு அதிரடித் தோல்வியைத் தழுவிக் கொண்டது.  

குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் முஸ்லிம் காங்கிரஸால் மட்டும்தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கட்சிகளினூடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளால் பிறர் பயனடைந்துள்ளனர். மாற்றுக் கட்சிகள் ஊடாக முஸ்லிம் பிரதி நிதித்துவம் ஒன்றைப் பெறுவதானது வெறும் சூதாட்டம் போன்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இதே நிலமைதான் தோன்றியுள்ளது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் அந்த மாவட்டங்களில் முற்றாக இல்லாமல் போய்விட்டது.  

இனரீதியான சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும் இந்நாட்டில் வழிநடாத்தப்படும் அரசியல் நகர்வுகளால் மக்கள் துருவமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது இத்தேர்தல் முடிவுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது. வடக்கிலும் தெற்கிலும் பெரும்பான்மை கட்சிகளினூடாக போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களின் பெறுபேறுகள் இதனை தெளிவுப்படுத்துகின்றன. முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக தனித்துவமாக தங்கள் செயல்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய காலம் இதுவென்பதை புரிந்து கொள்ள வேண்டும். 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்ற பழமொழி பொய்த்துப்போகாது.

இத்தேர்தலில் வெற்றிபெற்ற இரு சமூகங்களையும் சார்ந்த கட்சிகள் 3 ல் 2 பெரும்பான்மையுடன் வெற்றியடைந்துள்ளதை கொண்டு அரசியல் துருவமயப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அடையாளம் காணலாம். 3வது சமூகமான நாங்கள் தெற்கிலுள்ள வேற்று கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் இந்த துருவமயப்படுத்தலுக்கு உந்து சக்தியாக மறைமுகமாக உதவியிருப்பதை நாம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
வடமாகாண மக்கள் தங்களது எண்ணங்களை மிகவும் தெளிவாகவும் காட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். சுயநிர்ணம், தனித்தேசியம், உள்ளக சுதந்திரம், பிரிபடாதஒற்றை நாடு என்ற  அவர்களது தேர்தல் வாக்குறுதிகள்பற்றி இத்தேர்தல் மூலம் நடாத்திய கருத்துக் கணிப்புக்கு மக்கள் சாதகமான பதிலை தெட்டத்தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். சர்வதேசத்துக்கும் இந்நாட்டிலுள்ள பெரும்தேசிய கடும் போக்குவாதிகளுக்கும் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

இதுபோன்ற ஒர் செய்தியை வடக்கில் வாழும் இன்னொரு சிறுபான்மை சமூகமாகிய நாமும் சொல்வதற்கான முழுப் பலத்தை எமக்குத்தர விடாமல் வெறும் ஆசை வார்த்தைகளுக்கும், அரிசி, சீனி, பிளாஸ்டிக் பொருட்களுக்கும், சலுகை அபிவிருத்திகளுக்கும் தமது வாக்குகளை அடமானம் வைத்தவர்கள் தடுத்துவிட்டுள்ளனர்.

எனினும் முஸ்லிம் காங்கிரஸ் காட்டிக் கொடுப்புக்கள் கழுத்துறுப்புக்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் மிகவும் உறுதியுடன் தொடர்ந்தும் செயல்படுவதற்கான சக்தியை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த சக்தியை எமக்கு ஊட்டிவரும் எமது வேட்பாளர்கள், வாக்காளர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் போராளிகள் அனைவருக்கும் நன்றி.
அத்துடன் எமக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துவிட்டு இறுதிக் கட்டத்தில் தரப்பட்ட சொற்ப சலுகைகளுக்காகவும், போலி வாக்குறுதிகளுக்காகவும் களம்மாறிய நலிந்த உள்ளங்களுக்கும்; எமது அனுதாபங்களுடனான வாழ்த்துக்கள்.

2 comments:

  1. சூடு சுரணையற்றவர்கள். திரு. விக்னேஸ்வரன் ஐயா அவர்களிடமும், அவரது ஆட்களிடமும் சென்று அரசியல் பாடம் கற்றுவரச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. politics - social relations involving intrigue to gain authority or power

    ReplyDelete

Powered by Blogger.