Header Ads



நம்பி வாக்களித்த மக்களின் எண்ணங்கள் வீண் போகாத வகையில் எமது செயற்பாடுகள் அமையும்

அபிவிருத்தி மோகம் மற்றும் அதிகார கெடுபிடிகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து வடக்கு மாகாண சபையில் சமூகத்தின் சார்பில் துணிச்சலுடன் தனித்துவக் குரல் ஒன்று ஒலிப்பதற்கு வகை செய்த மன்னார் மாவட்ட மக்களுக்கு எனது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அங்கு தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவன் என்ற ரீதியில் நான் அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் அத்தனை அபிவிருத்திகளும் குவிக்கப்பட்டிருந்த போதிலும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் தமது இன அடையாளத்தையும் தனித்துவத்தையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்பதை இத்தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர்.

இதன் மூலம் இந்த அரசாங்கத்திற்கு மட்டுமலாமல் சர்வதேசத்திற்கும் அவர்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது அபிவிருத்தி, சலுகைகள் என்பதை விட தமக்கு உரிமையும் தனித்துவமும் சம அந்தஸ்த்துமே அவசியம் என்பதே அந்த செய்தியாகும்.

அது மட்டுமலாமல் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களினால் கிழக்கில் உருவாக்கப்பட்டு வடக்கிலும் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரசை அங்கு அழிந்து விடாமல் பாதுகாக்கும் பெரும் பணியை தமது வாக்குப் பலத்தின் மூலம் நிறைவேற்றி மறைந்த தலைவருக்கு தமது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்ட மக்கள் செய்திருக்கும் சாதனையானது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான ஆரம்பமாகும். அவர்கள் தெரிவு செய்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வடக்கு மாகாண சபையில் சமூகத்தின் மிகப்பலமான குரலாக திகழ்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இத்தேர்தலில் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் அபிவிருத்தியில் மோகம் கொண்டு- அற்ப சலுகைகளுக்காக- சிந்தித்து வாக்களித்திருக்கா விட்டால் வடக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக அழிந்து விட்டது என்கின்ற எதிரணியினரின் வசை பாடலுக்கு வழியேற்பட்டிருக்கும் என்பதுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையில் அரசுக்கோ வேறு எந்த சக்திக்கோ அஞ்சாமல்- சோரம் போகாமல் முஸ்லிம் சமூகத்தின் சார்பான குரலை துணிச்சலுடன் ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கு பிரதிநிதி ஒருவர் இல்லாத கைசேதம் ஏற்பட்டிருக்கும் எனலாம்.

இத்தகைய ஒரு துரதிருஷ்டம் கட்சிக்கோ வடக்கு மக்களுக்கோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு கட்சியின் தலைவரும் அமைச்சருமான் ரவூப் ஹக்கீம் அவர்களின் உத்தரவின் பேரில் நன்கு திட்டமிட்டு- அங்கேயே முகாமிட்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

இத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இறுதித் தருணத்தில் எமது கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் ஐவரை அரசாங்கம் பறித்தெடுத்து எமது கட்சிக்கு எதிராக பாரிய சதி அரங்கேற்றப்பட்டு- அரச தரப்பு பட்டியலில் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் எமது பணியை மிகவும் சவாலாக ஏற்று செயற்படுத்தினோம்.

குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை ஆரம்பித்த போது பள்ளிவாசல்களில் மக்கள் சந்திப்புகளை நடாத்தி அவர்களுக்கு மூளைச்சலவை செய்து, சமூக உணர்வை ஊட்டி கட்சியின் பங்காளிகளாக அவர்களை மாற்றியது போல் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் அபிவிருத்தி எனும் பிடிக்குள் அகப்பட்டிருந்த மக்களை பள்ளிவாசல்களில் ஒன்றுசேர்த்து கட்சிப் போராளிகளாக மாற்றியமைத்தோம். இதுவே எமது வெற்றியின் ரகசியம் என்று கூறினால் அது மிகையாகாது.

சுமார் மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் தங்கியிருந்து அரசாங்க தரப்பினரின் அதிகார கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எமது அமபாரை மாவட்ட இளைஞர் படையணியுடன் மூலை முடுக்கெல்லாம் சென்று இத்தகைய தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது எனக்கு பக்க பலமாக இருந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், பரக்கத்துல்லாஹ், உமர் அலி, எம்.முஸ்தபா, சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் மற்றும் சட்டத்தரணி முஸ்தபா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் தேவையான சந்தர்ப்பங்களில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முத்தலிப் பாவா பாருக் அஸ்லம் ஹாஜி ஆகியோருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இது தவிர எமது தியாகம் நிறைந்த- அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கு முழு வடக்கு மாகாணத்திற்கும் பொதுவாக மன்னார் மாவட்டத்தில் ஓர் உறுப்பினரை அறுவடையாகப் பெறுவதற்கு சமூக உணர்வுடன் வாக்களித்த அப்பகுதி மக்களுக்கு கட்சியின் சார்பிலும் இளைஞர் காங்கிரஸ் சார்பிலும் இதயத்தில் சொரியும் நன்றிப் பூக்களை காணிக்கையாக செலுத்துகின்றேன்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூக இயக்கத்தை நம்பி வாக்களித்த மக்களின் எண்ணங்கள் வீண் போகாத வகையில் வடக்கு மாகாண சபையில் எமது செயற்பாடுகள் அமையும் என்பதையும் உரிமையுடன் கூடிய அபிவிருத்திகள் மற்றும் தேவைகளை நிறைவு செய்து தருவதற்கான முயற்சிகள் மிகவும் கரிசனையுடன் முன்னெடுக்கப்படும் என்கின்ற உறுதி மொழியையும் இத்தருணத்தில் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று அந்த அறிக்கையில் ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.