Header Ads



பிரார்த்தனை..!


-இனியவன் இஸாறுதீன்-

இது
கவிதையாக இல்லாமல் போகட்டும்
விதையாக இருந்தால் போதாதா?
முதல் உன் உயிர்க்காற்றை
இந்த விதைக்குள்
ஊற்று இறைவா

நிராயுதபாணியாய்த்தான்
கையேந்துகிறோம் உன்னிடம்
எங்கள் வழிபாட்டுத் தலங்களில்
அவர்கள் செய்யும் கொடுமைகளை
பொறுக்க முடியாதவர்களாய்

புல்வெளிகளிலும்
புனித மஸ்ஜிதுகளிலும்
கடற்கரைப் பரப்புகளிலும்
பெருநாள் தொழுகையிலும் கூட
சகோதரர்களோடு ஒன்றுகூடி
முறையிடுகிறோம் உன்னிடம்
கொஞ்சம் செவிமடு இறைவா

எங்கள் தேசம் எரிகிறது
எதுவுமில்லை எங்களிடம்;
ஆனால்;
எங்கள் தலைவர்களின் கைகளில்தான்
இருக்கின்றது பிடில்

எங்களுக்காகவும்
எங்கள் தாய்நாட்டுச் செழிப்புக்காகவும்
இறைஞ்சுகின்றோம் உன்னிடம்
கொஞ்சம் வலுக்கொடு இறைவா

இந்த உயிர்ப்பறவைகளுக்கும்
சிறகுகள் சேரட்டும்
அந்த வெளிச்சஅலகுகளால்
காலத்தின் கறுப்பைக்
கத்தரித்துப் போடட்டும்

குறிக்கோள் இல்லாமல்
நீ
காட்டுப்பூவைக் கூட
சிரிக்க விடமாட்டாய்

மழை இங்கே
விசிறிக்கொண்டே
இருக்கிறது

காற்றுக் கூட
இருமிக்கொண்டே
நடக்கிறது

எல்லாவற்றிற்கும்
உன்னிடம்
காரணம் இருக்கிறது

இதயவயல்களை உழுது
எண்ணவிதைகளை நடுபவனே

செயற்படச் சொல்லித்தானே
நீ
எங்களுக்கு கை கால்களைக்
கொடுத்தாய்

நாங்களோ நாக்கைத் தவிர
உறுப்புகள் அனைத்திற்கும்
வருடாந்த விடுமுறை
கொடுத்து விட்டோம்

'அநியாயங்கள் அழிந்தொழிய
அல்லாஹ்வே நீ அருள்வாய்'
என்ற எங்கள் வேண்டுதலில்
பிறந்தகத்தில் வஞ்சிக்கும்
இனவெறியர்களின் மூர்க்கத்தால்
எங்கள் ஆன்மா போட்டிபோடுகின்றது

எங்கள் ஏழைகள்
ஆயுதங்களை
சாமிகளுக்கே கொடுத்துவிட்டு
ஆசாமிகளாய் நிற்கிறார்கள்

இங்கே
கள்வனின் கையில்
சாவியைக்
கொடுத்திருக்கிறார்கள்

தகுதி இல்லாத துஷ்டனிடம்
தலைகுனிந்து
நிற்கிறார்கள்

பல் கட்டியிருக்கும்
போலிப் புலிகளுக்கு வீரவணக்கம்
செலுத்துகிறார்கள்

வெற்றி பெற்றவனுக்கே
விழா எடுக்கிறார்கள்
எப்படி வென்றான்
என்ற கேள்விக்கான
திருவிளையாடல்களை
எவரும் ஆராய்வதில்லை

நாங்கள் தொழுவது உனக்காகத்தான்
எங்கள் தொழுகை என்பது
உதடுகளின் ஊஞ்சலாட்டமல்ல
சுவாசப்பையின் பெருமூச்சுமல்ல
அங்கங்களுக்கான அன்றாடப் பயிற்சியுமல்ல
உள்ளத்தால் உன்னை நம்பிச் சரணடைந்து
உன் பலத்தால்
அநியாயத்தைத் தடுத்தும் எதிர்த்தும்
உன் வழி பிறழாமல்
வாழ்வதல்லவா?

உனது நீர்த்தொட்டிக்குள்
நீந்தி விளையாடும் தங்கமீன்கள் நாங்கள்
கனவு காணும் கடுவன்பூனைகள்
காத்திருக்கின்றன

இறைவா
பாசிக்குப் பக்கத்தில் வரக்கூட
நாங்கள் உன்னை நினைத்தே
பயிற்சி பெற்றோம்

எந்தத் தீமையும்
உன் அனுமதியில்லாமல்
அழிவதில்லை
ஆனால் அதே தீமை
வேறொரு முகத்தோடு
முகாமிடலாம்
அது கூட
உன் ஏற்பாடு அல்லவா?

பாலையிலும் மழை
பொழிகிறது
கடலுக்குள்;ளேயும் மேகம்
கர்ப்பமடைகிறது

நாயனே
எல்லாம் உனது செயல்

நாங்கள்
பந்தயங்களில் தோற்றவர்கள்
ஏனெனில்
நாங்கள் பந்தயங்களில்
பங்கேற்காதவர்கள்

இனி நாங்கள்
போரிலாவது வெற்றி பெற
வழிகாட்டு இறைவா

No comments

Powered by Blogger.