Header Ads



அமெரிக்காவில் ஈரானின் ஜனாதிபதி

கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் விளைவாக அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் அணுகுண்டு தயாரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களை எதிர்த்து வந்தன.

ஆயினும், ஈரான் எரிசக்திக்காகவும், மருத்துவ ஆராய்ச்சிக்காகவுமே அணுசக்தித் திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில், ஈரானின் புதிய அதிபராக ஹசன் ருஹானி பதவியேற்றதைத் தொடர்ந்து பதட்ட சூழ்நிலைகள் தணிந்து காணப்படுகின்றன.

அமெரிக்காவிற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்ட ருஹானி, இன்று ஐ.நா பொதுக்குழுக் கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்த இருக்கின்றார். மேலும், இந்த வார இறுதியில் அமெரிக்கா மற்றும் ஐந்து வல்லரசு நாடுகளுடன் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சரும் அணுசக்தி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி உலக நாடுகள் ஈரானின் மீது கொண்டிருந்த இறுக்கம் தளர்வதை வெளிப்படுத்துவதாய் அமைகின்றது. கடந்த ஆறு வருடங்களில் அமெரிக்காவுடன் ஈரான் ஈடுபடும் உயர்மட்டப் பேச்சுவார்த்தை இதுதான் என்று குறிப்பிடப்படுகின்றது.

நேற்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறைத் தலைவரான கேதரின் ஆஷ்டன், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சரான முஹமது ஜாவத் சரிபை சந்தித்தார். ஐரோப்பிய யூனியனின் பொதுக்குழு தொடங்குமுன் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, பேச்சுவார்த்தைக்கான வழிமுறை குறித்து விவாதித்ததாக ஆஷ்டன் தெரிவித்தார். வியாழனன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பங்கேற்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஷ்டனுடனான சந்திப்பு நம்பிக்கையைத் தருவதாக இருந்தது என்று தெரிவித்துள்ள சரிப், புதிய சூழ்நிலைகளில் புதிய ஆரம்பம் தேவை என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.