நவீனம் என்ற ஒரு மாயைக்குள் மனித குலம் தவிக்கின்றது - உதுமாலெப்பை
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
வரலாறுகளையும், பழமைகளையும் மறந்து இன்றய இளைஞர் சமூதாயம் நவீனம் என்ற மாயைக்குள் மாறிக்கொண்டு வருவது சமூக, கலாசார பாரம்பரியரீதியான சீர்கேடுகளுக்கே இட்டுச் செல்லும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில் வொண்டர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்துப்பட்டு வந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு நேற்று பொத்தவில் மத்திய கல்லூரி மைதானத்தில் கழகத்தின் தலைவர் எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விளையாட்டுக் கழகங்கள் வெறுமனே விளையாட்டுத் துறையில் மட்டும் நின்று விடாது சமூக, சமய, கலாசார விடயங்களிலும் ஈடுபாடு கொண்டவர்களாக தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சமூகத்தினையும், தனது பிரதேசத்தினையும் எண்ணி நன்மை செய்யக் கூடிய நல்ல தலைவர்களாக இன்றய இளைஞர்கள் நாளை வரமுடியும். அதற்கான பயிற்சிக் களமாக விளையாட்டுக்கழகங்கள் வளர்க்கப்படல் வேண்டும்.
இன்றய காலத்தில் நவீனம் என்ற ஒரு மாயைக்குள் மனித குலம் சென்று கொண்டுதவிக்கின்றது. இதனால் ஆத்மீகரீதியான வழிபாடுகள், சமய அனுஷ்டானங்கள், கலாசார பாரம்பரியங்கள் அருகிக் கொண்டு செல்கின்றன. நம்முன்னோர்கள் செய்து வந்த நல்ல பல பாரம்பரியங்கள் அழிந்து கொண்டு செல்கின்றன. அவர்களிடத்தில் இனரீதியான வேறுபாடுகள் இருக்கவில்லை. ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரை மதித்து அன்புகாட்டி சிறந்த நற்பன்புடன் வாழ்ந்துள்ளனர். அவர்கள் இன்ப துன்பங்களில் கைகொடுத்து உதவிய வரலாறுகளை நமது பெற்றோர்கள் நமக்கு கூறியுள்ளனர். எனவே அயல்வீட்டாரை நேசிக்க வேண்டும். அவருக்கு ஏற்படும் துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும். குறிப்பாக எமது கிழக்கு மாகாணத்தில் இருந்துவந்த இன நல்லுறவு மீண்டும் கொண்டுவரப்படல் வேண்டும் இங்கு ஒரு இனம் ஒரு இனத்தை ஓதுக்கி, வெறுத்து வாழமுடியாது என்ற யதாhத்தை புரிந்து கொண்டவர்கள் நாங்கள். அந்தவகையில் விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டுத்துறை ஊடாக இனநல்லுறவையும் கட்டியெழுப்பவதற்கு பாடுபடவேண்டும்.
இவ்வுலகம் மனிதனுக்கு சோதனைக்களமாகவே இறைவன் படைத்துள்ளான். எனவே விளையாட்டுத் துறையை எடுத்தாலும், அரசியலை எடுத்தாலும் இவைகளில் காணப்படும் வெற்றி அல்லது தோல்வி என்றுமே நிலையானதாக அமைந்துவிடுவதில்லை. அந்தவகையில் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சி பெருமிதம் அடைவதிலும், தோல்வி அடைந்ததை இட்டு துயரத்தில் துவண்டு கிடப்பதிலும் எந்தவொரு மனிதனாலும் உயர்வினை அடைந்து கொள்ள முடியாது.

Post a Comment