தேசிய சூரா பேரவை பற்றிய கேள்விகளும், விடைகளும்...!
Ash.S.H.M.Faleel (Naleemi)
இலங்கையில் தேசிய சூரா பேரவையொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து அண்மையில் மேலோங்கி வரும் அதேவேளை, அதற்கான வேலைத் திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் சூரா பேரவையொன்று ஏன் தேவை? அதன் பணிகள் யாவை? அதில் அங்கம் வகிப்பவர்களது தகைமைகள் யாவை போன்ற கேள்விகள் பலருக்கும் எழுவது நியாயமாகும். அவற்றிற்கான விடைகள் தெளிவாக அமைதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் முன்பாக அது ஏன் தேவை என்ற கேள்விக்கு குர்ஆனிய ஹதீஸிய பின்னணியில் விடை தேவை.
அது ஓர் இஸ்லாமிய பொறிமுறை
1) குர்ஆனில் அல்லாஹ் (42: 38) (3: 159) (2: 233) போன்ற வசனங்களில் சூரா பற்றி கூறுகிறான்.
2) நபி(ஸல்) அவர்கள் பத்ர், உஹத், அகழி யுத்தங்களுக்கு முன்னரும் பின்னரும் ஹுதைபியா உடன்பாட்டின் பின்னரும் தனது தோழர்களைக் கலந்தாலோசித்தே முடிவுகளை எடுத்தார்கள்.
3) தொழுகைக்கு அழைப்பது எவ்வாறு என்ற பிரச்சினை வந்த போது பல தோழர்களது ஆலோசனைகளும் பெறப்பட்ட பின்பே தற்போதைய பாங்கு முறையை அறிமுகம் செய்தார்கள்.
4) தனது மனைவி ஆயிஷா(ரழி) அவர்கள் மீது எதிரிகள் அபாண்டம் சுமத்தியவேளை தோழர்களது ஆலோசனைகளைப் பெற்றார்கள்.
5) குர்ஆனில் அல்லாஹ்(4: 83) என்ற வசனத்தில் ,முக்கியமான ஒரு விடயம் தொடர்பான தகவலொன்று சமூகத்தில் பரவிக் கொண்டிருக்கும் போது அதனை துறை சார் நிபுணர்களிடம் கேட்டு ஊர்ஜிதப்படுத்திய பின்னரே பரப்ப வேண்டும் என்று கூறுகிறான். அத்தகவலின் ஆழ அகலங்கள், சூட்சுமங்களைப் புரிந்தவர்கள்(யஸ்தன்பிதூனஹூ) அது பற்றி நுணுகி ஆராய்ந்து வெளியிடும் முடிவில் தங்கிருக்கும்படி இந்த வசனத்தில் உணர்த்தப்படுகிறது.
6) ``உங்களுக்குத் தெரியாத போது வேதத்துக்குரியவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.``(16: 43) என்ற திருமறை வசனம், துறை சார்ந்தவர்களை அணுகி அவர்களில் தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது. மார்க்கத்தோடு நேரடியாக சம்பந்தப்படும் அதாவது வஹியால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டிய விவகாரங்களில் அல்லாமல் மனித சிந்தனைக்கு இடம்பாடான துறைகளில் அதாவது `இஜ்திஹாத்` செய்ய முடியுமான துறைகளில் கலந்தாலோசனை செய்யப்படலாம் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
மார்க்கத்தோடு நேரடியாக சம்பந்தப்படாத விவசாயம், தொழிநுட்பம், மருத்துவம்…. போன்ற இன்னோரன்ன துறைகளில் வஹியின் தலையீடு வரையறுக்கப்பட்டதாகும். அதாவது, அவற்றின் இலக்குகள், அவற்றில் ஈடுபடுபவர்களது மனநிலை என்பன இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று மட்டுமே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவற்றை நடைமுறைப்படுத்துவது, கண்டு பிடிப்புகளில் ஈடுபடுவது போன்ற பொறி முறையுடன் சம்பந்தப்பட்ட அம்சங்களை மனிதர்களே தீர்மானிக்க முடியும்.
இதற்கு நல்லதொரு உதாரணத்தை நபி(ஸல்) அவர்களது வரலாற்றில் காணலாம். அவர்கள் மதீனாவுக்கு வந்தவேளை ஸஹாபாக்கள் ஈத்த மரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்து விளைச்சலைப் பெற்று வந்தார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். நபிகளாரின் கட்டளைக்கிணங்க மகரந்த சேர்க்கை செய்யாமல் தோழர்கள் உற்பத்தி செய்த போது விளைச்சலில் வீழ்ச்சியேற்பட்டது. அப்போது நபியவர்கள் ‘‘உங்களது உலக விவகாரங்களில் நீங்கள் அதிகம் அறிவுள்ளவர்களாக இருக்கிறீர்கள்’ என்று கூறி மகரந்த சேர்க்கைக்கான தடையை நீக்கினார்கள். இதிலிருந்து பயிர்ச் செய்கை முறைகளுடன் தொடர்பான அறிவை அத்துறை சார்ந்தவர்களிடமிருந்து பெறுவதே சிறந்தது என்பதுடன் அதில் வஹியின் தலையீடு இருக்கமாட்டாது என்றும் உணர்த்தப்படுகிறது.
எனவே ஹலால்-ஹராம், சுன்னத்-பிஃஅத், வாஜிப்-சுன்னத்,குப்ர்- ஷிர்க் போன்ற இஸ்லாமிய விவகாரங்களைக் கையாள்வதில் உலமாக்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சமூக வாழ்வின் துறை சார்ந்த விவகாரங்களில் அவ்வத்துறை சார் நிபுணர்கள், விற்பன்னர்களின் ஆலோசனைகளும் அனுபவங்களும் உதவியாகக் கொள்ளப்படுவது அவசியமாகும்.
நடைமுறை உதாரணங்கள் சில
இலங்கைச் சூழலில் கூட்டுமுயற்சியும் சூராவும் அவசியப்படும் முக்கியமான துறைகளுக்கான சில உதாரணங்கள் வருமாறு:-
1.இலங்கையில் இனங்களுக்கிடையிலான உறவு பாதிக்கப்ப்ட்டதனால் ஏற்பட்ட விபரீதங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது.இந்நிலையிலிருந்து விடுபட்டு அனைத்து இனத்தவரும் நல்லிணக்கதோடும் சமாதானமாகவும் வாழும் சூழல் உருவக்கப்பட வேண்டுமாயின் ஒவ்வோர் இனத்தினதும் நியாயமான அபிலாசைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை ஓரளவு மிகச் சரியாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் அங்குள்ள இது விடயமாக நல்ல அறிவுத்தெளிவும் பின்னணியும் கொண்டவர்களது அபிப்பிராயங்கள் பெறப்பட வேண்டும்.இதற்கு சூரா முறை தான் மிகப்பொருத்தமானதாகும்.
2.அரசியல் யாப்புக்கான 13 ஆம் திருத்தச் சட்டத்தில் அரசு ஏதாவது திருத்தங்களையோ மாற்றங்களையோ கொண்டு வந்தால் பொதுவாக இலங்கை மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை நன்கு ஆராய்ந்த பின்னரே அது பற்றிய இறுதித் தீர்மானத்துக்கு வர வேண்டி வரும். ஒரு சிறுபான்மை என்ற வகையில் அரசியல் அதிகாரம்,அரசியல் பங்கேற்பு என்பனவற்றில் பாதிப்பு ஏற்படுமா?இல்லையா என்ற விடயத்தில் அரசியல் துறை விற்பன்னர்களான முஸ்லிம் அரசியல் விஞஞானிகளது அபிப்பிராயங்கள் இங்கு பெறப்பட வேண்டும்.இத்திருத்தம் முஸ்லிம்களின் தனித்துவத்துக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமையும் என இந்த துறை சார்ந்தோர் நிரூபிக்கும் பட்சத்தில் அது ஷூரா சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் முடிவொன்று பெறப்படும்.
3. 1000 பாடசாலைகள் அபிவிருத்திட்டமொன்றை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் சாதக, பாதகங்களை இஸ்லாமியப் பின்புலத்தில் நின்று பார்ப்பதற்கு அத்திட்டம் பற்றிய ஞானமுள்ள முஸ்லிம் கல்விமான்களது அபிப்பிராயங்கள் பெறப்பட வேண்டும். இலங்கையில் இத்துறை பற்றி ஆழிய அறிவுள்ளவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இல்லாமலில்லை. மேலும், இன ரீதியான பாடசாலைகள் முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இப்படியான கருத்துக்கள் மேலோங்கும் போது ஷுரா சபை கூடி துறை சார்ந்தவர்களது கருத்துக்களைப் பெற்று மட்டுமே முடிவெடுக்கும்.
4. இலங்கையில் வெளிவரும் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் ,நிகழ்ச்சிகளிலும் இஸ்லாத்தை கேவலப்படுத்தும் அம்சங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால் அல்லது இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை நூல்களும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளியிட்டு வருவதாக தெரிய வந்தால் மீடியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அத்துறையில் அதிகம் பரீட்சயமுள்ளவர்கள் அது பற்றிய ஆய்வொன்றைச் செய்யும்படி வேண்டப்பட வேண்டும். ஆய்வின் முடிவுகளின் பின்னர், அவர்களது ஆலோசனைகளின் பேரில் தக்க நடவடிக்கைகளை சூரா எடுக்கும்.
5.. இலங்கை முஸ்லிம்களது பொருளாதாரத் துறையுடன் சம்பந்தமான பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. உதாரணமாக தற்போது முஸ்லிம்களது பொருளாதாரம் வாங்கி விற்கும் முறையை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலை மாறி விளைதிறன் (Productivity)மிக்கதாக அது அமைக்கப்படுவதற்கான திட்டங்களுக்கும் வகுக்கப்பட வேண்டும். வாழ்க்கையின் அடித்தளமாக பொருளாதாரம் இருப்பதை (4: 5) என்ற வசனத்தின் மூலம் குர்ஆன் தெரிவிப்பதாலும் தலைநிமிர்ந்து சுயமரியாதையோடு வாழவும்,மார்க்கத்தை வளர்க்கவும் சொத்து செல்வங்கள் அவசியப்படுவதாலும் இத்துறை சார்ந்த திட்டங்களை வகுப்பதற்கு பொருளாதார துறைசார் வல்லுனர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.
6. இஸ்லாம் உடல் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. ‘‘உனது உடலுக்கு நீ செய்ய வேண்டிய ஒரு கடமை உன் மீதுள்ளது’’ என நபி(ஸல்) கூறினார்கள். ஆனால், இலங்கை வாழ் முஸ்லிம்கள்- பிற சமூகங்களோடு ஒப்பிடுகையில் - அதிக தொகையில் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சீனி வியாதி, இருதய நோய்கள் என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுக்கான காரணங்கள் மருத்துவத்துறை சார்ந்தவர்களின் உதவியுடன் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டும். மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதனை `துன்யாவு`டைய காரியம் எனப் புறக்கணிக்க முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். அனுராதபுர மாவட்டத்தில் வாழும் மக்களில் கணிசமான துறையினர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாயின் அது சம்பந்தமான ஆய்வுகளில் முஸ்லிம் பிரதிநிதிகளது பங்களிப்பும் தேவைப்படுகிறது. அதனால் பாதிக்கப்படுவோர் எந்த மதத்தவர் என்பது முக்கியமானதல்ல. முஸ்லிம்களும் நாட்டு நலனில் அக்கறையாக உள்ளனர் என்பதை அது காட்டும் என்பதே முக்கியமான விடயமாகும்.
இவ்வாறு துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டிய பல துறைகள் உள்ளன.தொழில்வாய்ப்பின்மை,வறுமை,வெளிநாட்டு வெலைவாய்ப்பு,குடும்ப உடைவுகள்,பிற சமூகங்களுடனான உறவுகள்,இளைஞர் விவகாரங்கள்,சூழல் மாசடைதல் போன்ற இன்னோரண்ன துறைகள் உடனடியாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
அடையப் பெறும் நலன்கள்
இவ்வாறு பலதுறை சார்ந்தவர்களது கருத்துக்கள் பெறப்படுவதால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அடையப் பெறும் நலன்கள் அளப்பரியவையாகும்.
1. இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற யதார்த்தத்தை நடைமுறையில் காட்ட முடியும்.
2. பல்துறை சார்ந்தவர்களும் சமூகத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பைப் பெறுவர்.
3. ஆய்வு, ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிவுபூர்வமான, தூரநோக்குள்ள திட்டங்களை வகுக்க வழியேற்படும்.
4. வெளியிலிருந்து வரும் பல்வேறுபட்ட சவால்களை ஐக்கியமாக நின்று எதிர்கொள்வதற்கான பலம் ஏற்படும்.
5. அற்பமான காரியங்கள் தவிர்க்கப்பட்டு அடிப்படையாகவுள்ள, உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் இனம் காணப்பட்டு, ஆக்கபூர்வமான திட்டங்கள் வகுக்கப்படும்.
6. ஒவ்வொரு இயக்கமும், சங்கமும் தத்தமது வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்துவது போலவே சமூகத்தின் பொதுவான வேலைத் திட்டங்களுக்காக ஒன்றிணைந்து ஐக்கியப்படுவதற்கான சூழல் உருவாகும்.
7. ‘ஒரு வேலைத் திட்டத்தில் பலரும் ஈடுபட பலவேலைத் திட்டங்களில் ஒரு சிலர் மட்டும் ஈடுபடுவது அல்லது எவருமே ஈடுபடாமலிருப்பது` என்ற தற்போதைய நிலையில் மாற்றம் வந்து வேலைத் திட்டங்களை முஸ்லிம்கள் தமக்கிடையே முறையாகப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகும்.
8. ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையிலான உறவு பலத்த அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்படவும் தேசிய நலன்களில் முஸ்லிம்கள் பங்கெடுத்து நாட்டை கூட்டாகக் கட்டியெழுப்பும் பணி விரைவுபடுத்தப்படவும் வழியேற்படும்.
9. உணர்ச்சி வசப்படுவது, வெளிவேஷங்களில் மயங்குவது, குறுகிய இலக்குகளுக்காக முண்டியடித்துக்கொள்வது போன்ற நிலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
இலங்கையில் சூராவுக்கான பேரவை உருவாகும் பட்சத்தில் அகழி யுத்தத்தின் போது ஸல்மான்(ரழி) அவர்களின் ஆலோசனையை நபி (ஸல்) பெற்றதையும், யூதர்களுடன் கருத்துப் பரிமாறல் செய்ய வசதியாக சுரியானி மொழியைப் படிக்க ஸைத்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டதையும், ஹுதைபியாவின் பின்னர் உம்மு ஸலமா(ரழி) வின் ஆலோசனையை அன்னார் பெற்றதையும், நேர் வழி நடந்த கலீபாக்கள் தமது விவகாரங்களைத் தீர்மானிக்க முன்னர் சூரா செய்தமையையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். அவர்கள் சிறப்பான திட்டங்களை வகுத்து செயற்பட்டமையின் ரகசியங்களில் ஒன்றாக சூராவின் பலமும் அமைந்திருந்தது.
இலங்கையில் அமையவுள்ள சூராப் பேரவைக்கான உத்தேச திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய கலந்துரையாடல் அல்லாஹ்வின் அருளால் கடந்த 21.5.2013 அன்று வெற்றிகரமாக இடம்பெற்றது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 1.6.2013 அன்று அடுத்த கட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதில் இடைக்கால சூரா சபையொன்று அமைக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட பல இயக்கங்கள் மற்றும் சங்கங்களது ஆதரவு இந்த நகர்வுகளுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொது மக்களும் தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பமுண்டு.
தகுதிகள்
எது எப்படியிருப்பினும் சூராப் பேரவைக்கு வர இருப்பவர்களுக்கான தகுதிகள் பற்றிய முன்மொழிவுகளும் அவசியமாகும். எடுத்துக் காட்டாக சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
1. ஈமானும் தக்வாவும், இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களும்
2. துறை சார் அறிவும் அனுபவமும்
3. சமூக உணர்வும் பற்றும்
4. விவேகம், தூர நோக்கு, நிதானம், பக்கச்சார்பின்மை
5. சூராவின் பணிகளில் ஈடுபடுவதற்கான கால அவகாசம்
6. தைரியம், தியாக மனப்பாங்கு
7. சமூக அங்கீகாரம்
மேற்கூறப்பட்ட அம்சங்கள் பற்றி மேலும் அபிப்பிராயங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. அல்லாஹ்வின் கிருபையால் இப்படியான ஒரு நிலை சமூகத்தில் உருவாகும் பட்சத்தில் அதிகபட்சமான தவறுகளை தவிர்க்க முடிவதோடு பூரணத்துவத்தை நோக்கி படிப்படியாக நகர முடியும். தற்போதைய சூழலில் சூராப் பேரவை உருவாக்கத்துக்காக உழைப்போருக்கு ஆலோசனைகளை வழங்குவதும் ,தனிநபர் நலன்களை விட சமூக, நாட்டு நலனை முன்னிறுத்தி செயல்படுவதும் விரும்பத்தக்கது. அல்லாஹ் சகலரது முயற்சிகளையும் தூய்மையானவையாகவும்,சரியானவையாகவும் ஆக்குவானாக!

Please, Intha Qualification very important to soora society members. I mean, Entha oru pirachchanaikkum, Engal maththiyil (piraral or Nammul iruppavarhalal) Konduwaruhinra poluthu mudivuhal Al-quran and Al- hadeesai maiyamaha waithu mudiwu ettapadal wendum. So when their facing the problem then we will search result from Al-quran and hadees. otherwise not good follow we are elders.
ReplyDeleteமுஸ்லிம்கள் தமது காரியங்களில் ஆலோசனை ஷ{றா செய்து கொள்ள வேண்டும் என குர்ஆன் சொல்கிறதே தவிர சூறா சபை என்ற ஒரு இயக்கத்தை உருவாக்க சொல்லவில்லை. நபியவர்களும் இப்படியொரு சபையை உருவாக்கி அதற்கு தலைவர் செயலாளர் என்றெல்லாம் அமைக்கவில்லை. ஆகவே இதனை மார்க்கம் என கருத முடியாது. சூறா சபை அமைப்பது மார்க்கம் என நினைத்தால் அது பித்அத்தானது. மற்றபடி நமது நாட்டில் இருக்கும் ஆயிரம் இயக்கங்களில் ஆயிரத்தோராவது என கலாச்சார ரீதியில் கருதினால் அதில் பிழையில்லை. எனவே சூறா சபை அமைக்கும் நோக்கத்திற்கு குர்ஆன் ஹதீதை பாவிப்பது பிழை. இந்த சபைகள் சமூகம் எதிர் நோக்கும் இனவாத பிரச்சினைக்கு எந்த நன்மையும் தரப்போவதில்லை. மாறாக இதனைகாட்டி சில வெளிநாட்டு சுற்றுலா, கொஞ்சம் அறபு நாட்டு பணம் இத்யாதி இத்யாதி அவ்வளவுதான். –முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
ReplyDeleteGreat.....Job...!! Allah is with Jama'h(Group)-(Hadhees) May Allah All mighty Help them & us to drive the misunderstood Islam to Correct Islam, showing the World that Islam is the solution for Problems & Life.
ReplyDeleteபொதுவாக ஒரு சபையின்,அல்லது ஒரு இயக்கத்தின் ,அல்லது ஒரு சமூகத்தின் தேவைகளைக்கருத்திற்கொண்டு, அபிலாஷைகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிற முடிவுகளை ,செயற்படும்படியானதாக ,நடைமுறைசார்ந்ததாக உருமாற்றம் பெறுவதற்கு அதிகாரம் அல்லது அரசியல் செல்வாக்கு அவசியமாகும்.அதாவது இஸ்லாம் என்ற ரிஸாலாவை நடமுறைப்படுத்த கிலாஃபா என்ற அரசியல் அதிகாரம் தேவை.நபி(ஸல்)அவர்களின் 23 வருட கால ரிஸாலத் பணியில் ,மக்காக்காலப்பருருவத்தின் இஸ்லாத்தின் வளர்ச்சியின் வேகத்தைக்காட்டிலும் மதீனாப்பருவத்தின் இஸ்லாத்தின் வளர்ச்சி அதி வேகமானதாகும்.இதற்குக்காரணம் மதீனாவிலே நபியவர்களால் நிறவப்பட்ட கிலாபத்(அரசியல் அதிகாரம்) ஆட்சியாகும்.இந்த அரசியல் முன்னெடுப்பை நபியவர்கள் மதீனாவை வந்தடைந்ததும் உடன் செய்தார்கள்.இந்த கிலாபத்தின் பின்னணிதான் குலபாஉர்ராஷிதீன் காலங்களில் இஸ்லாமிய இமாரா என்ற நிருவாகம் அதியுன்னத இடத்தையடைய காரணமாயமைந்தது.எனவே தேசிய மஷூறா சபைக்கான அதிகார அலகு பற்றிச்சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.
ReplyDeleteமேலும் ஷூறா சபையில் உலமாக்கள் இடம்பெற்றிருந்தாலும் ,உலமாசபைக்கு சமாந்திரமான ஒன்றாக தேசிய ஷூறா சபை அமையாமல் அ.இ.ஜ.உலமா சபைக்கு ஆலோசனை கூறும் ஒரு சபையாக இது அமைவது பொருத்தமாகும்.ஏனெனில் அறிவியல், கல்வி, அரசியல், பொருளாதார ,வெகு ஜனத்தொடர்பு சுகாதார, சமூகவியல் துறை சார்ந்தவர்கள் இதில் உள்ளடக்கப்பட்டாலும் ,நீதி நேர்மை சமூக உணர்வு ,பக்கசார்பின்மை ,அதிலும் குறிப்பாக ஈமான் தக்வா போன்ற அகவியல் அம்சங்கள் உள்ளோரை இனங்காண்பதென்பது அல்லது பெற்றுக்கொள்வது கடினமானதாகும்.அவ்வாறு இத்தகைய சிறப்பம்சமுள்ளோர் இனங்காணப்பட்டாலும்,காலவோட்டத்தில் இத்தகையோரை அதாவது பிற்காலங்களில் இத்தகையோர்தான் இச்சபையை அலங்கரிப்பார்களா?என்பது சந்தேகமே. அரசியல்அதிகாரத்தேவயின் காரணமாக அரசியல் வாதிகளின் செல்வாக்கு இங்கு ஏற்பட வாய்ப்புகள் ஏராளம்.அது தவிர ஷூறா சபையின் தீர்மானங்கள் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குள்ளதாக, ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைவதற்கு ஷூறா சபையின் ஆலோசனைகள், உலமா சபையின் ஊடாக மக்களுக்குச்சென்றடைய வேண்டும். ஏனெனில் முஸ்லிம்கள் உலமசபையின் தீர்மனங்களுக்கு கட்டுப்பட்டுப்பழகியவர்கள்,நபியவர்களின் மரணத்துக்குப்பின் ,சகீபது பனீ சாயிதா ,,விலே நடைபெற்ற கலீபாத்தேர்வு உரையில் அபு பக்ர் (றழி) அவர்கள் :குறைஷிகளில் ஒருவர் கலீபாவாகத்தெரிவு செய்யப்படுவதை நான் உங்களுக்கு ஆலோசனையாகக்கூறுகிறேன்.ஏனெனில் இந்த அரேபிய தீப கற்பத்து மக்கள் குறைஷிகளுக்கு கட்டுப்பட்டு பழகியவர்கள் என்று கூறியது இங்கு கவனிக்கத்தக்கது, நிச்சயமாக அல்லாஹ்வை -அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் உலமாக்கள்தான்.(35-28)
அல்ஹம்துலில்லாஹ்!
ReplyDeleteசிறுபான்மையிலும் சிறுபான்மையினராக முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா தாயகத்தில் கண்டிப்பாக பல்துறை சார்ந்த அறிஞர்கள் பங்கேற்கும் இத்தகைய தேசிய சூறா ஒன்று அவசியமே! அதில் மாற்றுக் கருத்துக் கொள்வோர் ஏதோ விடயத்தில் தமது சுயநலன்களை மறைத்துக் கொண்டவர்களாகவே இருக்க முடியும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியலும், சமய வழிகாட்டலும் கடந்த காலங்களில் எவ்வாறு அமைந்திருப்பினும் எதிர்காலத்தில் நமது சந்ததிகளின் இருப்பை ஸ்திரப்படுத்தும் தூரநோக்கில் இவ்வாறான ஒரு உயர் சூறா சபை அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மாத்திரமல்ல, வருங்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நலன் மற்றும் அரசியல் பலம் ஆகியவற்றைப் பேணும் வகையில் இத்தேசிய சூறா சபையின் ஊடாகவே நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் தன்னலமற்ற சமூக நலன் கருதிய அறிஞர்களைப் போட்டியிடச் செய்யவும் வேண்டும்.
தேசிய சூறா ஒரு பக்கம் இருந்து கொண்டு இன்றைய அரசியல் இழிவாரங்களே தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தில் நடைமுறையில் இருந்து வருமாயின் இந்த முன்னெடுப்பினால் எதிர்பார்க்கும் பலன் எமது சமூகத்தில் விளைய மாட்டாது.
அறிஞர் அஷ்ஷெய்க் பளீல் நளீமி அவர்களின் பரந்த விளக்கத்திற்கு எனது நன்றிகள். எல்லாம் வல்ல அழ்ழாஹ் தங்களினதும், ஏனையோரினதும் நல்லெண்ணங்களுக்கு நற்கூலியளிப்பானாக!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-