சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களை வேட்டையாடிய பெண் மாவோயிஸ்டுக்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார், முன்னாள் உள்துறை மந்திரி மகேந்திர கர்மா உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது. இது பற்றி தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட சுமார் 300 மாவோயிஸ்டுகளில் சுமார் 200 பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக பெண்கள்தான் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர். 20 கார்களில் வந்த காங்கிரஸ் தலைவர்களை தடுத்து மடக்கியதும் நந்தகுமார் படேல் எங்கே என்று துப்பாக்கி ஏந்தி நின்ற பெண் மாவோயிஸ்டுகள் கேட்டுள்ளனர். அவர் காரை விட்டு இறங்கியதும் அவர் மற்றும் அவரது மகன் கைகளை பின்புறமாக கட்டி இழுத்து சென்றனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடத்தி சென்ற பிறகு நந்தகுமார் படேலையும் அவர் மகன் தினேசையும் பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். அதுபோல மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் பெண்களே சுட்டுள்ளனர்.
பொதுவாக பெண் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஈடுபடும் போது தங்களது ஹிட் லிஸ்டில் இல்லாதவர்களை சுட்டுக் கொல்லமாட்டார்கள். ஆனால் கடந்த சனிக்கிழமை தாக்குதலில் பெண் மாவோயிஸ்டுகள் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்துள்ளனர்.
பெண் மாவோயிஸ்டுகளுக்கு இந்த தாக்குதலுக்காக 7 பேர் கொண்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி கொடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டு தலைவர்களில் கமாண்டர் களாக இருக்கும் கடகம் சுதர்சன் என்ற ஆனந்த், ரமணா, கணேஷ் ஆகிய 3 பேர் மூளையாக இருந்துள்ளனர்.
இவர்களுக்கு உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களில் யாரோ ஒருவர் தகவல்கள் கொடுத்து உதவி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் தலைவர்களின் யாத்திரை பாதையை மாற்றி விட்டுள்ளனர். அதை மாற்றியதில்தான் சதி உள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் தாக்குதல் நடத்தி 27 காங்கிரசாரை கொன்றது தாங்கள்தான் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். தங்களுக்கு எதிராக படை அமைத்த முன்னாள் மந்திரி மகேந்திர கர்மாவை குறி வைத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Post a Comment