Header Ads



சிரியாவில் போராடும் போராளிகளிடையே பிளவு


சிரியாவில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் அஸத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஓராண்டாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகிறது. அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 94,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் சிரியா கிளர்ச்சியாளர்களுடன் அமெரிக்கா, ரஷியா தரப்பினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் நிறைவடைந்தது.

இதற்கிடையே வரும் ஜூன் மாதம் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரான்ஸ் மற்றும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்களை திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

ஐரோப்பிய யூனியன்: அதே போல் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் வெள்ளிக்கிழமை கூடிப் பேசுகின்றனர். சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் விநியோகம் செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும்.

பிரிட்டனும், பிரான்ஸýம் அதிபர் அஸத்துக்கு ஆயுதம் விநியோகம் செய்வதற்கான தடையை நீட்டிக்க வேண்டும். கிளர்ச்சியாளர்களுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்க வேண்டும் என கூறி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் குழுவில் பிளவு: கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் மேலும் சிலரை சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு பிரிவின் தலைவரான மைக்கேல் கிலோவை சேர்ப்பதில் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது. அவரை சேர்த்தால் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதிக்கம் குழுவில் குறைந்து விடும். இதற்கு சவூதி அரேபியா எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் ஏற்படும் எனத் தெரிகிறது.

ரசாயன ஆயுதங்கள் பயன்பாடு: சிரியா உள்நாட்டுப் போரில் அரசுப் படைகள் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல், மே மாதங்களில் கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை அரசுப் படையினர் பிரயோகித்துள்ளனர். 

பான்-கீ-மூன் கவலை: சிரியா உள்நாட்டுப் போரில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் கவலை தெரிவித்துள்ளார்.

இதனால் போர் மற்ற நாடுகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது சிரியாவில் ஏற்பட்டுள்ள போருக்கு ஆதரவு தருவதை மற்ற நாடுகளும், அமைப்புகளும் நிறுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.