'மக்களுக்கு தெரியப்படுத்தவே அமெரிக்க போர்க்குற்ற ஆவணங்களை வெளியிட்டேன்'
அமெரிக்காவின் போர் குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளத்திற்கு வழங்கியதற்காக ராணுவ வீரர் பிராட்லி மேன்னிங் கைது செய்யப்பட்டார். இவர் மீது 12 குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஈராகிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்த போர் அறிக்கைகள், இரண்டு வீடியோ காட்சிகள் மற்றும் வேறு சில ஆவணங்கள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் விக்கிலீக்ஸ்க்கு அளித்ததை பிராட்லி மேன்னிங் ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரைச் சேர்ந்த இவர் 35 பக்க அறிக்கையை ராணுவ கோர்ட்டில் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் அந்நாட்டின் மக்களை நடத்திய விதத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இதனை வெளியிட்டேன். இதனை பொது மக்கள், குறிப்பாக அமெரிக்க மக்கள் தெரிந்து கொண்டால், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் ராணுவம் குறித்து விவாதங்கள் நடைபெறும் என்று நினைத்தேன்.
2007-ம் ஆண்டு போரில் அமெரிக்க ஹெலிகாப்டர், 'ராய்ட்டர்' செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் உள்ளிட்ட 11 பேரை கொன்ற சம்பவம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. வீடியோவில், அமெரிக்க படைகள் மகிழ்ச்சியாக இந்த ரத்த வெறியாட்டத்தை நிகழ்த்திய காட்சிகள் மிக ஆபத்தான அம்சமாகும். ஆனால் அமெரிக்காவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இது அமெரிக்காவுக்கு அவமானகரமான விசயமாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இவரை உலகிலுள்ள இடதுசாரி செயல்பாட்டாளர்கள் உண்மையை வெளிக் கொண்டுவந்த நாயகனாக கொண்டாடினர். இவர் ஆயிரம் நாட்களுக்கும் அதிகமாக காவலில் உள்ளார்.
இவரை ராணுவத்திலிருந்து நீக்கிய பிறகு தண்டனை வழங்கப்பட உள்ளது. இவர்மீது மேலும் 12 குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளது. ரகசிய அறிக்கைகளை வைத்திருந்தது, அதனை வெளியிட்டது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளது. இதற்காக அவருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

Who will be punished? The team brutally murdered or the innocent brought the truth to people?
ReplyDelete