பாகிஸ்தானில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் 7,046 பேர்
பாகிஸ்தான் முழுவதும் 7,046 பேருக்கு பல்வேறு நீதிமன்றங்களில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைக்காகக் காத்திருப்பதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதன் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜபருல்லா கான் என்பவர் பாகிஸ்தானிய ஊடகங்களில் வெளியான மரண தண்டனைக் கதைகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக் கொண்டு சென்றார். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதன்கிழமையன்று உச்ச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மரண தண்டனை வழங்கப்பட்ட 5,378 பேர் மாகாண உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்துள்ளனர். 1,031 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
மாகாண ரீதியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:
பஞ்சாப் - 4,981
சிந்து - 266
கைபர் பக்தூன்க்வா - 102
பலுசிஸ்தான் - 29
இவை தவிர, பாகிஸ்தான் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ள கருணை மனுக்களின் எண்ணிக்கை 532. ஷரீஅத் நீதிமன்றத்தில் 21 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனு நிலுவையில் உள்ளது.
பாகிஸ்தானில் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கில் 1970ஆம் ஆண்டு வாழ்நாள் சிறைத் தண்டனையின் காலம் 14 ஆண்டுகள் என்பதிலிருந்து 25 ஆண்டுகள் என்று உயர்த்தப்பட்டது. ஆனால் ஜியாவுல் ஹக் ஆட்சியின் போது வாழ்நாள் சிறையின் காலம் 25 ஆண்டுகள் என்பது நீடிக்கப்பட்டு மரண தண்டனையும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
nneram.

Post a Comment