Header Ads



பாலியல் கொடுமைக்கு மரண தண்டனை - முஸ்லிம் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்


பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் மாநாடு

தமிழ்நாடு–புதுச்சேரி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிரணி மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு அமைப்பின் மாநில தலைவர் அ.ஷப்பீர் அஹ்மத் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் பாகிரா, சென்னை மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஏ.பாத்திமா, புதுச்சேரி மாநில மகளிரணி துணை அமைப்பாளர் கதீஜா, கோவை மாநகர மகளிரணி அமைப்பாளர் பீ.அஸ்மா, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் துணை தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் தமிழ்நாடு–புதுச்சேரி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில பொது செயலாளர் மவுலவி முஹம்மத் ஹனீபா மன்பயீ நிறைவுரையாற்றினார்.

மரண தண்டனை

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடமளிக்க வேண்டும் என்ற வர்மா குழு பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த தண்டனையை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற தண்டனைகளை பொதுமக்களை சாட்சியாக்கி வழங்கினால் அது நிச்சயமாக குற்ற தடுப்பு நடவடிக்கையாக அமையும்.

* திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, மத உணர்வுகளைக் காயப்படுத்த கூடிய வகையில் காட்சிகள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும். திரைப்பட தணிக்கை குழுவில் அரசியல் தலையீடு இல்லாமல் சமூக அக்கறையுடையவர்களை நியமிக்க வேண்டும்.

கண்ணியமான ஆடைகள்

* எல்லாத் தீமைகளுக்கும், குற்றங்களுக்கும் குறிப்பாக, பெண்களுக்கு எதிரான எல்லாக் கொடுமைகளுக்கும் மது அடிப்படை காரணமாக இருக்கிறது. எனவே மதுவை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்.

* கல்வி நிறுவனங்கள் மாணவிகளுக்கு கண்ணியமான ஆடைகளை நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும்.

* தற்காப்பு கலைகளை பள்ளி அளவிலேயே மாணவிகளுக்கு கற்றுத் தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 11 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


No comments

Powered by Blogger.