Header Ads



80 ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...!



கருவில் இருந்த குழந்தையின் விரல் நகம் தாயின் ரத்த நாளத்துக்குள் புகுந்து அலர்ஜி ஏற்பட்டது. இதனால் கோமா நிலைக்கு சென்ற தாய், 12 மணி நேரத்தில் கண் விழித்தது டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இங்கிலாந்தின் செஷயரில் உள்ள செஸ்டர் நகரை சேர்ந்தவர் ஏஞ்சலா கோட்டம் (32). பள்ளி ஆசிரியை. இவருடைய கணவர் டேவிட். இவர்களுக்கு ஒலிவியா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்றார் ஏஞ்சலா. வழக்கமான பரிசோதனையின் போது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்வது தெரிய வந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஏஞ்சலாவுக்கு 8 மாதமானதும் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்தது.

உடனடியாக செஸ்டர் மருத்துவமனையில் அவரை கணவர் டேவிட் சேர்த்தார். 

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது ஏஞ்சலாவுக்கு திடீரென அலர்ஜி ஏற்பட்டது. மூச்சு விட திணறினார். அதை பார்த்த நர்ஸ்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பரிசோதித்த போது, கருவில் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் நகம் அல்லது தலை முடி, தாயின் ரத்த நாளத்துக்குள் புகுந்ததும், ரத்த ஓட்டத்தில் அது நுரையீரலுக்குள் சிக்கி கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் 80 ஆயிரம் பேரில் ஒருவருக்குதான் நடக்கும். இப்படி நடந்தால் தாயின் உயிரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்பதால் டாக்டர்கள் பரபரப்பு அடைந்தனர். குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். 

சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியில் எடுக்க கணவர் டேவிட்டிடம் அனுமதி கேட்டனர். அவர் ஓகே சொன்னதும், 8 மாதமே ஆனநிலையில் ஆபரேஷன் மூலம் இரட்டை குழந்தைகள் வெளியில் எடுக்கப்பட்டன. அதன்பின், ஏஞ்சலாவை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆபரேஷன் மூலம் பிரசவம் நடந்ததால் ஏஞ்சலாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. அத்துடன் ரத்தம் உறையும் தன்மையும் குறைந்தது. இதனால் 22 முறை ரத்தம் மாற்றப்பட்டு ஒருவழியாக ஏஞ்சலாவின் உடல்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் டாக்டர்கள் எதிர்பார்த்தபடியே அவர் கோமா நிலைக்கு சென்றார். 

கோமாவில் இருந்து மீள பல நாட்கள் ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் மனம் உடைந்தார் டேவிட். சோகத்துடன் மருத்துவமனையிலேயே காத்திருந்தார். அதற்கு பிறகு நடந்தது இன்னும் ஆச்சரியம். நன்கு தூங்கியவர் விழிப்பது போல கோமா நிலையில் இருந்து 12 மணி நேரத்தில் விழித்தார் ஏஞ்சலா. டாக்டர்களுக்கும் டேவிட்டுக்கும் ஆச்சரியமோ, ஆச்சரியம். ஒரே வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆனார். 8 மாதம் முன்பு குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளான அமிலிஅவா தற்போது நல்ல எடையுடன் ஆரோக்கியமாக உள்ளன. குழந்தைகளுடன் ஏஞ்சலா  டேவிட் தம்பதியும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.