சவூதி அரேபியாவில் உள்ளாடை கடைகளில் பெண்கள் பணியாற்றலாம் - பத்வா தீர்ப்பு
(Tn) உள்ளாடை கடைகளில் பணி புரிய சவூதி பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 இல் சவூதியில் வழங்கப்பட்ட பத்வாவில் இவ்வாறான கடைகளில் பணி புரிய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஷரிஆ சட்டத்தை மீறாத வகையில் பணி புரிய அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டின் நீதிக் குழு அறிவித்துள்ளது.
சவூதி பெண்கள் ஷரிஆ சட்டத்தை கடை பிடித்து பெண்களுக்கான உள்ளாடைகள் விற்கும் கடைகளில் பணி புரிய அனுமதிக்கப்படுகின்றனர் என்று சவூதி அரசின் ‘நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீய ஒழுக்க தடுப்பு’ பிரிவின் தலைவர் அப்தல் லதீப் ஷெக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பத்துவாவில் உள்ளாடை கடைகளில் பெண்கள் பணி புரிவது ‘மதிப்பற்றது மற்றும் குற்றச்செயல்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
சவூதியில் வேலையில்லா பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். அங்கு 30 வீதமான ஆண்கள் வேலையின்றி உள்ளனர்.
ஒட்டு மொத்தமாக 1.7 மில்லியன் சவூதி பெண்கள் வேலையின்றி உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர்கள் என சவூதி தொழில்துறை அமைச்சு கடந்த ஆண்டு வெளியிட்ட தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Post a Comment