விமானம் இன்னும் சிறிது நேரத்தில் நொறுங்கி விழப்போகிறது (படம் இணைப்பு)
விமானம் இன்னும் சிறிது நேரத்தில் நொறுங்கி விழப்போகிறது என்று கூச்சலிட்டு பக்கத்து சீட்டில் இருந்த பெண்ணை அடித்த பயணியை சக பயணிகள் விமானத்தில் கட்டிப் போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை நியூயார்க் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, பயணிகளுக்கு விமான ஊழியர்கள் மது சப்ளை செய்தனர். நீர்மோர் போல டம்ளர் டம்ளராக வாங்கி குடித்தார் ஒருவர். (45 வயது இருக்கும்) போதை ஏறியதும் திடீரென பக்கத்து சீட்டில் இருந்த பெண்ணை அடித்தார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறினார்.
அதற்குள் போதை ஆசாமி, விமானம் சிறிது நேரத்தில் நொறுங்கி விழப் போகிறது என்று கூச்சலிட்டார். அவரை சமாதானப்படுத்த சக பயணிகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. விமானம் விழப்போவதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். பின்னர் பயணிகள் சேர்ந்து அவரை இருக்கையில் கட்டி போட்டனர். இருக்கையையும் ஆசாமியையும் சேர்த்து டேப்பால் சுற்றினர். அவரது அலம்பலை அருகில் இருந்த மற்றொரு பயணி சுவாரஸ்யமாக போட்டோவும் எடுத்தார். 2 மணி நேரம் கழித்து நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த போலீசார் ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் ஐஸ்லாந்து பாஸ்போர்ட் இருந்தது. அவர் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

Post a Comment