உயர் நீதிமன்ற உத்தரவு
SN
கடந்த வருடம் நடைபெற்ற உயர் தரப் பரீட்சையின் மாவட்ட மற்றும் தேசிய மட்ட நிரல்படுத்தலை மீளக்கணிப்பிட்டு செப்டம்பர் மாதம் 10ஆம திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பரீட்சைகள் ஆணையாளருக்கும் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய இந்த நிரல்படுத்தலை தயாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய சுமார் 400 மாணவர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, கே.ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட்ன.
2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பது தொடர்பான யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நீதிமன்றில் இன்று சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான நான்கு தீர்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலாவது தீர்வுக்கு அமைய மேலதிமாக மூவாயிரத்து 675 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தீர்வாக மேலதிகமாக மூவாயிரத்து 48 மாணவர்களும் மூன்றாவது தீ்ர்வாக மேலதிகமாக நான்காயிரத்து 928 மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியளிக்கப்படவேண்டும் எனவும் அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்ட நீதிமன்றம் மூன்றாவது தீர்வுக்கு அமைய நானகாயிரத்து 928 மாணவர்களை அனுமதிப்பது மிகவும் உகந்தது என சுட்டிக்காட்டிள்ளது.
நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஜூலை மாதம் 25ஆம் திகதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய இரண்டு பாட விதானங்களின் கீழ் தோற்றிய மாணவர்களின் தரவுகளை வெவ்வேறாக கவனத்திற்கொண்டு இந்த தீர்வுகள் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.
தமது தலைமையில் அனைத்து மனுதாரர்களினதும் சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூன்று நாட்களாககூடி இந்த தீர்வுகள் அடங்கிய அறிக்கை தயாரித்ததாகவும் சட்ட மாஅதிபர் தெரிவித்தார்.
குறித்த மனுக்களை மீண்டும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Post a Comment