வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் ஆராய்வு
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை(20) பத்தரமுல்லையிலுள்ள கிராமியக் கலைகள் அரங்கத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து துறைசார்ந்தவர்களினால் விளக்கி கூறப்பட்டது.
குறிப்பாக நிதி, நிர்வாகம், கல்வி, சுகாதாரம், பாதைகள், விவசாயம் உள்ளடங்களான சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் தங்களின் முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்து விளக்கி கூறினர். இதில் கலந்து கொண்ட திணைக்கள தலைவர்களும் தங்களது நிறுவனம் சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளை ஆளுநருக்கு எடுத்துக் கூறினர்.
அனைத்தையும் கேட்டறிந்தபின் வடமாகாண ஆளுநர் கருத்துத் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சகல செயற்பாடுகளும் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் துரிதமாக நிறைவேற்றப்பட்டு மக்கள் பயனடைய செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியுடனான கலந்துரையாடலில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment