கல்முனைக்கு அபிவிருத்தி வேண்டுமா..? சு.க. பலப்படுத்துங்கள் - நாமல் நிபந்தனை
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனைப் பிரதேசத்தை துரித கதியில் அபிவிருத்தி செய்வதாயின் இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமான பெஸ்டர் றியாஸ் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குரிப்பிட்டார்.
"அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியுள்ள கல்முனைப் பிரதேசத்தை துரித கதியில் அபிவிருத்தி செய்வதாயின் இங்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இப்பகுதி மக்கள் பலப்படுத்த வேண்டும்.
இப்போது இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிகவும் திறமையான- ஆளுமை மிக்க- இளம் தலைமைத்துவம் ஒன்றை வழங்கியுள்ளோம். ஆகையினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான பெஸ்டர் றியாஸ் அவர்களை ஆதரித்து வெற்றியீட்ட செய்வதன் மூலம் அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதி ஒருவரைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இதன் மூலம் இப்பிரதேசத்தினதும் மக்களினதும் எதிர்காலம் மிகவும் நல்லதாக அமையும்" என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட்.ஏ.எச்.ரஹ்மான் உட்பட பிரமுகர்கள் பலரும் இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment