Header Ads



சுதந்திர நாடாகும் தகுதி பலஸ்தீனுக்கு இல்லை - உலக வங்கி கூறுகிறது


பலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவளிக்கும் அளவுக்கு அதன் பொருளாதாரம் ஸ்திரமானதாக இல்லை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓர் இறையான்மையுள்ள அரசுக்கு செலவுகள் குறைக்கப்பட்டு வருவாயை அதிகரிக்கும் சாமர்த்தியம் இருக்க வேண்டும் என உலக வங்கியின் 181 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பலஸ்தீன நிர்வாகம் தனிநாடொன்றை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதனது பொருளாதாரம் அதற்கு உதவுவதாக இல்லை. பலஸ்தீன நிர்வாகத்தின் பொருளாதாரம் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தனது நிர்வாகம் பாரிய பொருளாதார சிக்கலை சந்தித்து வருவதாக பலஸ்தீன நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் இருப்பதாகவும் 500 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகவும் பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. கடந்த 1994 ஆம்ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கைக்கு அமைய அமைக்கப்பட்ட பலஸ்தீன நிர்வாகம் சந்திக்கும் பாரிய நிதி நெருக்கடி இதுவென கூறப்பட்டுள்ளது.

எனினும் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் வழங்க சவூதி அரேபிய அரசு கடந்த வாரம் பலஸ்தீன நிர்வாகத்துக்கு 100 மில்லியன் டொலர் நிதி உதவி அளித்தது. அதேபோன்ற பலஸ்தீன நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட வரி வருவாய்க்கான இஸ்ரேலின் நிதி இரண்டு வாரங்கள் முன்கூட்டியே பலஸ்தீன நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு ள்ளது.

நன்கொடை நாடுகளின் நிதியுதவியின் மூலம் 2007, 2011 காலப் பகுதியில் பலஸ்தீன நிர்வாகத்தின் உள்நாட்டு உற்பத்தி 7.7 வீதமாக அதிகரித்தது. எனினும் அரச சேவையின் மூலம் மாத்திரமே அதனது பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள், விவசாயத்துறை ஆகியவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோன்று சர்வதேச பொருளாதார நெருக்கடியால் நிதியுதவியும் வீழ்ச்சி கண்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் அரசின் பலஸ்தீனம் மீதான பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அங்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.