மத ரீதியாக ஒரு யுத்தத்துக்கு தூபமிடும் செயற்பாடு முன்னெடுப்பு - அமைச்சர் றிசாத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
இந்த நாட்டில் அப்பாவி தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களது இரத்தங்கள் அநியாயமான முறையில் பயங்கரவாதிகளின் செயப்பாடுகளால் ஒட்டப்பட்டதுடன், அங்கவீனர்களையும், விதவைகளையும், நாதியற்றவர்களையும் உருவாக்கும் வேலையினையே இந்த பயங்கரவாதம் பரிசாக கொடுத்திருப்பதாக தெரிவித்த வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று அரச நியமனங்களை பெறும் பட்டதாரிகள் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையினையே நடை முறைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
வன்னி மாவட்டத்தில் 750 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை வவுனியா கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. வவுனியா மாவட்டத்தில் 293 பேரும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 127 பேரும்,மன்னார் மாவட்டத்தில் 330 பேரும் இந்த நியமனங்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனினால் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது,
தமது பணிகளை நிறைவு செய்து கொள்ள அலுவலகத்துக்கு வரும் பொது மக்களுக்கு தமது நேர்மையான பணிகளை பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இன்று நீங்கள் பட்டதாரிகளாக வருவதற்கும் நியமனங்களை பெற்று தமது வேதனத்தை பெற்றுக் கொள்வதற்கும். இந்த நாட்டின் மக்கள் செய்த தியாகமும், அவர்கள் செலுத்தும் வரிகளுமே காரணமாகவுள்ளது. இலவச பாடப் புத்தகம் முதல் கற்பிக்கும் ஆசிரியர் தொடக்கம் பட்டம் பெறுவதற்கு கிடைக்கும் மஹாபொல புலமைப்பரிசில் என்பன அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றது.
இவற்றைப் பெற்றுக் கொண்ட நாம் இந்த அரசாங்கத்திற்கும்,பொதுமக்களுக்கும் நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும்.தமக்கு ஒரு கொள்கையிருக்கலாம். கட்சி நிறங்கள் இருக்கலாம்,அவைகளை வைத்துக் கொண்டு தமது பணிகளை செய்து கொள்ள வரும் மக்களை பிழயாக வழி நடத்த பயன்படுத்த கூடாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிந்தனையை நாம் ஒவ்வொருவரும் எமது உள்ளத்தில் நிலையாக பதித்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் குறிப்பாக வடக்கில் அழிந்து போன பிரதேசங்களை கட்டியெழுப்ப தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித இனப்பாகுபாடுகள் பாராது பணியாற்றிவருகின்றார். இவ்வாறு அவரிடம் இருந்து நன்மைகளை பெற்றுக் கொண்டு அவருக்கு எதிராக பேசும் சக்திகளுடன் நாமும் சேர்ந்து செயற்பட முனையக் கூடாது. நல்லதை சிந்தித்து செய்றபடுவதன் மூலம் இன்னும் எத்தனையோ உதவிகளை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று எமது மாவட்டத்தில் இன ரீதியான மோதல்களை தோற்றுவிப்பதற்கு சில தமிழ் அரசியல் வாதிகள் தினந்தோறும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன,மத,பேதங்களை ஏற்படுத்தி தமது அரசியல் இலக்கை அடைந்து கொள்ளலாம் என்று அவர்கள் பாரக்கின்றனர். யுத்தம் இடம் பெற்ற போது,ஆயுத ரீதியில் அச்சுறுத்தியவர்கள் இன்று அதில் தோல்வி கண்டு உள்ளதையும் இழந்துபோன நிலையில்,மத ரீதியாக ஒரு யுத்தத்துக்கு தூபமிடும் வேலையினை செய்கின்றனர்.
இன்று வழங்கப்படும் இந்த நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்ற போது,மக்களையும்,பட்டதாரிகளையும் பிழையாக வழி நடத்தி இன ரீதியான பிரசாரங்களை கொண்டு சென்றனர்,ஒரு சமூகத்திற்கு மற்றும் நியமனங்கள் வழங்கப்படுவதாக ஊடகங்களை பிழையாக வழி நடத்தினர்.இந்த நியமனங்களின் விகிதாசாரத்தை நீங்கள் நோக்கினால்,எத்தனை இஸ்லாமியர்கள்,எத்தனை சிங்களவர்கள்,எத்தனை தமிழர்கள் இருப்பதை காணலாம். இந்த உண்மைகளை வெளிப்படுத்த சிலருக்கு விருப்பமில்லை,நாம் அதனை வெளிக் கொண்டுவந்தால் அதனையும் வெளியிடுவதற்கு இடம் கொடுப்பதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத் பதியுதீன் மீண்டும் ஒரு அழிவை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான சக்திகளுக்கு அரச நியமனங்களை பெற்றுள்ள பட்டதாரிகள் இடம் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆமைச்சர் றிசாத் பதியுதீனின் இந்த அரும் பெறும் சேவையினை பாராட்டி வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்க தலைவரினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,ஸ்ரீடெலோ அமைப்பின் தலைவர் உதய ராசா, வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன்,மன்னார் ஆணையாளர் எஸ்.எல்.டீன்,ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சதாசிவம் கணரத்தினம்,அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத் உட்பட வவுனியா, மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் ,அரச திணைக்களங்களின் பிரதி நிதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.








Post a Comment