Header Ads



பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்கு பெற்றோர் பொறுப்பேற்க முடியாது - ஜே.வி.பி.யும் பாராட்டு

S NEWS

பாகிஸ்தான் பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்திரியின் மகனுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. பிரபல வர்த்தகர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் பிரதம நீதியரசரின் மகனான அர்சலான் இப்திகார் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் காணி உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகரிடம் இருந்து மூன்று தொடக்கம் நான்கு மில்லியன் அமெரிக்க டொலர்களை பாகிஸ்தான் பிரதம நீதியரசரின் மகன் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக கடந்த சில தினங்களாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பணத்தை இலஞ்சமாக வழங்கியதாக கூறப்படும் வர்த்தகரின் கருத்தை அடுத்தே இந்த விடயம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகின. தமது நிறுவனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதாகக் கூறி பிரதம நீதியரசரின் மகன் அர்சலான் இப்திகார் இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரிடம் குறித்த வர்த்தகர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட இப்திகார் பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளமை தொடர்பிலான தகவல்களை ஆதாரங்களுடன் குறித்த வர்த்தகர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த சம்பவத்துடன் பிரதம நீதியரசர் இப்திகார் செளத்திரி தொடர்புபட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் எதுவும் தம்மிடம் இல்லை எனவும் வர்த்தகர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பிரதம நீதியரசரின் புதல்வர் அர்சலான் இப்திகார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனினும் இந்த நீதியரசர்கள் குழாமிலிருந்து தான் விலகிக் கொள்வதாக பிரதம நீதியரசர் இப்திகார் செளத்திரி அறிவித்துள்ளதுடன், இரு நீதியரசர்கள் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது புதல்வருக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பில்லை என பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அர்சலான் இப்திகார் தனது புதல்வர் என அடையாளப் படுத்தப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும், எனவும் அவர் கூறியுள்ளார்.

அர்சலான் இப்திகார் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகக் குற்றம்சுமத்திய வர்த்தகர், இந்த வழக்கு மீதான விசாரணைகளின் போது நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப்பினால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட இப்திகார் சௌத்திரி, 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் சிவில் உரிமைகள் தொடர்பில் தலையிட்டு, தீர்மானங்கள் சிலவற்றை நிறைவேற்றியிருந்தார்.

இந்தப் பின்னணியில் பிரதம நீதியரசருக்கும், ஜனாதிபதி முஷாரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து இறுதியில் அவர் தனது பதவியை கைவிடும் நிலை ஏற்பட்டது.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் உள்ளிட்ட நீதித்துறையினர் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்திய காரணத்தினால் உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக மீண்டும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாகிஸ்தான் பிரதம நீதியரசர் வெளிப்படையாக இருந்தமை உலகத்திற்கு முன்னுதாரணமாக இருந்த போதிலும், இலங்கையின் நிலைமை அதற்கு மாறானது என பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

No comments

Powered by Blogger.