Header Ads



பொருட்களின் விலை உயர்வால் வாழ்வதைவிட சாவது மேல் என்ற நிலையில் மக்கள் - ரணில்

வாழ்வதை விட சாவது மேல் என்ற விரக்தி நிலைக்கு மக்கள் செல்லும் வகையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் புதையல் தோண்டுவதுடன்  நிறுத்திவிடாமல் மக்களின் சேமிப்புகளையும் தோண்டியெடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டிருப்பதாகவும் குற்றஞ் சாட்டிய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க எதிர்க் கட்சிகளுடன் இணைந்து வேலைத் திட்டமொன்றை  முன்னெடுக்கப் போவதாக தெரிவித்தார்.

பொருட்களின் சந்தை  நிலைவரத்தை ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள அப்துல் மஜீத் மாவத்தைப் பகுதிக் கடைகளுக்குச்  சென்று பொது மக்களுடன்  கலந்துரையாடியபோதே ரணில் விக்கிரம சிங்க இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

அங்கு  கூடிய மக்கள் பொருட்களின் விலையதிகரிப்புக்கு எதிராக கோஷமெழுப்பினர். எதிர்க் கட்சித் தலைவரின்  மக்கள் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , கொழும்பு மேயர், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்க் கட்சித் தலைவர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது ; 

ஐந்து பேர் கொண்ட குடும்பம் இரு தடவை தேநீருடனும் ஒரு இறாத்தல் பாணுடனும் சீவிப்பதற்கு ஏனைய செலவுகளுடன் மேலதிகமாக 4 ஆயிரம் ரூபா  தேவையாகவுள்ளது. இவ்வாறான நிலையில் மக்கள் எவ்வாறு வாழ்வது, மகிந்த சிந்தனையின் கீழ் பொருட்களின் விலையேற்றத்துக்கேற்ப  வருமானம் அதிகரிக்கவில்லை. கடந்த ஜனவரியில் மண்ணெண்ணை லீற்றர் 125 ரூபா விற்ற நிலையில் 149 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் 76 லிருந்து 115 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்ற சிறு வாகனங்களை பயன்படுத்துவோரும் அதனை கொண்டு தொழில் செய்வோரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். எரிபொருள் விலையதிகரிப்பையடுத்து ஏழு ரூபாவாக  இருந்த ஆரம்ப பஸ் கட்டணம் 9 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் ஏனைய கட்டணங்கள் 20 ரூபாவால் உயர்ந்துள்ளன.

மண்ணெண்ணை லீற்றர் 61 ல் இருந்து 100  ரூபாவாகவும் காஸ் சிலிண்டர்  2050 லிருந்து 2400 ரூபாவாகவும் அதிகரித்த அதேவேளை மின் கட்டணம் 40% த்தால் அதிகரித்துள்ளது. இதுபோல் பால் பைக்கற்று, கோதுமை மா மற்றும் பாணின் விலையும் அதிகரித்துள்ளன.  இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்கள் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டு செல்வது ,  டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு 130 ஆக உயர்ந்துள்ள நிலையில் 150 ரூபாவாக அதிகரிக்க இடமுண்டு.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் வாழ்வதை விட மரணிக்க ஏற்படும். மக்கள் வறுமை காரணமாக தமக்கு புதைகுழி தோண்டும் அதேவேளை அரசாங்கம் விசேட அதிரடிப் படையை கொண்டு புதையல் தோண்டுகின்றது. அத்துடன் புதையலை தோண்டுவதுடன் நின்று விடாது மக்களின் சேமிப்பையும் தோண்டி எடுக்கின்றது.  பினான்ஸ் கம்பனிக்குச் சொந்தமான பங்குக் கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதால் திறைசேரி செயலாளர் கொள்வனவைத் தடுத்துள்ளார். இதனை தடுத்தால் மட்டும் போதாது. ஊழலுடன் தொடர்புபட்டவர்களை வேலையில் இருந்து நிறுத்த  வேண்டும். ஊழலுக்கு வழிசமைத்துக் கொடுத்தவர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டில் ஒரு வீதமாகவுள்ள உயர் குழாம் வகுப்பினருக்கு சாதகமாக அரசாங்கம் செயற்படும் அதேநேரம்  மிகுதி 99% மான சாதாரண மக்களை கைவிட்டுள்ளது. யுத்தம் முடியும் வரை பொறுத்திருக்குமாறு அதன் பின் நிவாரணங்களை அளிப்பதாக கூறிய அரசாங்கம் மூன்று வருடங்கள் கடந்துள்ள போதும் எதுவித நிவாரணத்தையும் அளிக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு நிவாரணங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்க் கட்சிகளுடன் கூட்டிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து நாம் செல்கின்றோம். இதற்கு அரசாங்கம் அடிபணியாவிட்டால் வன்முறையற்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு கேட்கின்றோம்.

No comments

Powered by Blogger.