Header Ads



வட மாகாண சபை தேர்தல் தற்போதைக்கு இல்லை - அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் முழுமையாக ஏற்படுத்தப்பட்ட பின்னர்  வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமென அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது. வடக்கில் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு இன்னமும் 8 ஆண்டு காலம்  (2020)  தேவைப்படுமென  இலங்கைக் கண்ணிவெடி அகற்றும் வேலைத் திட்டத்தின் இணைப்பாளர் தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் தெரிவித்த கருத்தானது வட மாகாண  சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தும் உத்தேசம் அரசுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகக் காணப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் வட மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்தி இராணுவக் கட்டுப்பாட்டை அகற்றுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தல் விடுத்து வருகின்றன. ஆயினும் வட மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்தும்  திட்டத்தை அரசு கொண்டிருக்கவில்லையெனத் தென்படுகிறது.

வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாட்டில் பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் பிரதிப் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கையில், கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றி வடக்கில் முழுமையாக சிவில்  நிர்வாகம் ஏற்படும் வரையில் தேர்தலை நடத்தக் கூடிய சாத்தியம் இல்லை எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் கூறியதாவது; அரசாங்கம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எண்ணிய போதிலும் அங்கு புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றி விட்டு சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வரையில்  அங்கு தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் 90 சதவீதமான கண்ணி வெடிகளே அகற்றப்பட்டுள்ளன. சுமார் 100 கிலோமீற்றர் வரையிலான இடப் பரப்பில் இன்னும் கண்ணி வெடிகளை அகற்றியாக வேண்டும், இதற்காக  கணிசமான காலம் எடுக்கலாம். அத்துடன் கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றியதன் பின்னர் அங்கு மக்களை மீளக் குடியமர்த்தி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். முழுமையான சிவில் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னரே அங்கு தேர்தலை நடத்த முடியும்.

அரசாங்கம் வேண்டும் என்றே வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட முற்படவில்லை. ஜனநாக ரீதியில் தேர்தலை நடத்தவே அரசு உறுதி பூண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், வடக்கில் ஏற்கனவே பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது இந்தக் கண்ணிவெடி விவகாரம் குறுக்காக நிற்கவில்லையா எனக் கேட்டபோது பதிலளித்த அமைச்சர் கூறியதாவது  ; அந்தத் தேர்தல்களின் போது வட பகுதி மக்கள் இடம்பெயர்ந்து எங்கு வாழ்ந்து வருகின்றார்களோ அந்த இடங்களிலேயே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் வட மாகாண சபைக்கான தேர்தலை முழுமையாக நடத்த வேண்டுமானால் வடக்கில் சிவில் நிர்வாகம் முழுமை பெற வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்

No comments

Powered by Blogger.