Header Ads



மின்னல் தாக்குதல் - இவ்வருடத்தில் மாத்திரம் 31 பேர் பரிதாப மரணம்

மின்னல் காரணமாக இவ்வருடத்தில் 31 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதுடன்  இன்னும் இரு வாரங்களில் தென்மேற்குப்  பருவப் பெயர்ச்சி ஆரம்பமாவதால் மின்னலின் தாக்கம் குறையுமென  வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தற்போது முதலாவது இடைநிலைப் பருவப் பெயர்ச்சி காலநிலை காணப்படுகின்ற நிலையில்  இன்னும் இரு வாரங்களில் தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி கே.சூரிய குமார் தெரிவித்தார்.

இதனால் தற்போதைய வெப்பமான காலநிலை மாற்றமடையும் அதே நேரம் பிற்பகல் மற்றும் மாலை வேலையில் பெய்யும் இடியுடன் கூடிய மழை குறைவடையும் அதே நேரம் தென் மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வருடம் மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கெலி ஓயா எஹடகஸ்வெல மெல்யாய பகுதியில் ட்ரக்கை செலுத்திச் சென்ற ஒருவர் மின்னல் தாக்கி பதவிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை செவ்வாய்க் கிழமை மொனராகலை அளுத்வத்தை  வேஹேரகல பகுதியில் வீட்டில் சமையல் அறையில் இருந்த பெண் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். எத்தானுவெட்டுனுவ பகுதியில் வயலில் அறுவடையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கியதில் பலியாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.