Header Ads



கவிக்கோ அப்துர் ரஹ்மான் யதார்த்தம் தெரியாத இருட்டுக் கவிஞர் - முபாரக் மௌலவி


இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டது பற்றி தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தெரிந்து கொள்ளாமைக்கு காரணம் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களே என கவிக்கோ அப்துர் ரஹ்மான் கூறியிருப்பது இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அவரது தொடர்ச்சியான அறியாமையையே காட்டுகிறது என உலமா கட்சியின்  தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மற்றும் சிங்கள பேரினவாதங்களால் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி தமிழ் நாட்டு முஸ்லிம்கள் சரிவர தெரிந்து கொள்ளாமைக்கு பிரதான காரணம் இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் நாட்டு முஸ்லிம்களின் அக்கறையின்மைதானே தவிர இலங்கையின் எழுத்தாளர்கள் அல்ல.

அன்று இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள், இங்கு முஸ்லிம்கள் ராஜ போகம் அனுபவிப்பதாக கூறி விட்டு வருவார்கள். இந்த நிலையை போக்க வந்த தனித்துவ கட்சியும் இந்தியாவுக்குச் சென்று கூத்தாடிகளையும் பாடகர்களையும் இலங்கைக்கு கொண்டு வருவதில்தான் அக்கறை காட்டினார்களே தவிர இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தமிழ் நாட்டில் அரசியல் மயப்படுத்த முயலவில்லை.

அத்துடன் வடக்கிலிருந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட போது இது பற்றிய செய்திகள் உலகளாவிய ஆங்கில பத்திரிகைகளிலும் வெளி வந்தன. அதேபோல் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை அறபுப் பத்திரிகைகளில் கூட முன்பக்க செய்திகளாக வெளிவந்தன.

இப்படியிருந்தும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு தெரியவில்லை என்றால் அது இலங்கை எழுத்தாளர்களின் குற்றமல்ல, தமிழ் நாட்டு முஸ்லிம்களின் அறியாமையும், அக்கறையின்மையுமே காரணமாகும்.

கோவை முதல் குஜராத் வரை முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது என்பதை இலங்கையின் முஸ்லிமல்லாத ஊடகங்கள் கூட செய்திகளை பிரசுரிக்கின்றன. ஆனால் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தமிழ் நாட்டு முஸ்லிம் ஊடகங்கள் கூட கண்டு கொள்ளாமைக்கு காரணம் அவர்களின் இறுமாப்பும் அலட்சியமுமாகும்.

இலங்கை வந்த பின்பே இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் கவிக்கோவுக்கு தெரியுமென்றால் அவர் இதுவரை எந்த மூலையில் வாழ்ந்தார் என்று ஆச்சர்யமாக உள்ளது. இத்தகையவர்களை யதார்த்தம் தெரியாத இருட்டுக் கவிஞர்கள் என்று அழைப்பதே பொருத்தமாகும்’ என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

எமது முன்னைய செய்தி
http://www.jaffnamuslim.com/2012/04/blog-post_9641.html

இலங்கை முஸ்லிம்கள் மீதான கொடுமைகளை தமிழக முஸ்லிம்கள் அறியாமைக்கு இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களே காரணம் - கவிக்கோ அப்துல் ரகுமான்

1 comment:

  1. கவிக்கோ அப்துர்ரஹ்மான் சொன்னதில் உண்மையிருக்கிறது.
    மௌலவி முபாரக் கூறுவதிலும் உண்மை இருக்கிறது.

    முஸ்லிம் சகோதரர்களுக்கிடையில் கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து நடப்பதற்கு, நாம் முயற்சிப்போம்.

    நாம் சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக சொற்கணைகளை உபயோகிக்காது, முஸ்லிம்களின் நலனில் சிரத்தை காட்டுவதே நமது கடமை.

    கவிக்கோ அப்துர்ரஹ்மானுக்கும் மௌலவி முபாரக் அவர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!

    ReplyDelete

Powered by Blogger.