Header Ads



சமூகங்களிடையே இணக்கப்பாட்டுக்கு புலி ஆதரவு சக்திகள் முட்டுக்கட்டை - ரவூப் ஹக்கீம்

யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளாத புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் அரசின் நல்லிணக்க முயற்சிகளை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியிருக்கும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாட்டுப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு முன்வைக்கப்படுவதே சமூகங்களிடையேயான நல்லிணக்கத்துக்கு வழிசமைக்குமெனவும் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான வாதத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினைத் தோற்கடிப்பதற்காக ஐக்கியத்துடன் சகல அமைச்சர்களும் சென்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தோம். இப்பிரச்சினை தொடர்பாக பூரண விளக்கம் இன்மையால் சர்வதேச அளவில் வியாபித்திருந்த கருத்துக்கள் தொடர்பாகவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் விளக்கமளித்திருந்தோம். கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் நாம் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோம்.

நாட்டின் நல்லிணக்கச் செயற்பாடுகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றது. இதனால் நல்லிணக்க செயற்பாடுகள் மேலும் சிக்கல் நிலையினை அடையலாம். ஏனெனில் ஜெனீவாவில் இன்று எழுந்துள்ள பிரச்சினை காலம் தவறிய பிரச்சினையாக உள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் இப்பிரச்சினை விவாதிக்கப்படுகின்றது.

இப்பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் உணர்வுபூர்வமாக அணுகவேண்டிய தேவை காணப்பட்டது. அரச விவகாரங்களை மிகவும் கவனமாக செயற்படுத்த வேண்டியதும் முக்கியமானதாக இருந்தது. ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் அதன் பிரதி பலன்களில் நியாயமான செயற்பாடுகளை காண முடிகின்றது. நல்லிணக்க செயற்பாடுகளை நாம் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் நலனுக்காக தீர்மானங்களைச் சரியான முறையில் அமுல்படுத்த வேண்டும்.

போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதனால் அதன் பின்னரான செயற்பாடுகள் மிகுந்த அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியமை முக்கியமானது. அதேவேளை கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எதிரணியினரின் நிலைப்பாட்டினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை அரசு தனது கடப்பாட்டினை நிறைவேற்றத் தவறிவிட்டதென்ற நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவாவிற்கு செல்ல மறுப்பு தெரிவித்திருந்தமைக்கு அக்கட்சியினுள் ஏற்பட்டிருந்த உட்பூசல்களே காரணம். இச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் எம்.பி. ஒருவருடைய உருவபொம்மை யாழ்.பல்கலைக்கழகத்தில் எரிக்கப்பட்டது. சுமந்திரன் எம்.பி.யுடைய உருவ பொம்மையே இவ்வாறு எரிக்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசுடன் அனைவரும் ஒன்றிணையவேண்டுமென்றே நாம் கூறி வருகின்றோம். கொழும்பில் நடைபெறவுள்ள தமிழ் இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனைக் கூட அரசியல்மயப்படுத்தி சில விஷமத்தனமான கருத்துக்களை சிலர் முன்வைக்க முனைகின்றனர்.

இந்தியாவின் நட்புறவைக் கூட உரிய முறையில் புரிந்துகொள்ள முடியாத தமிழ் உணர்வாளர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தினர் நாட்டின் யதார்த்தத்தை சரியான முறையில் உணர்ந்து கொள்ளாமலும் அரசின் முயற்சிகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ளாமலும் நல்லிணக்க செயற்பாடுகளை முறியடிக்க முனைகின்றனர்.

நாட்டில் சமூகங்களிடையே இணக்கப்பாடு வேண்டுமென்றால் நாட்டுப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தான் தீர்வு முன்வைக்கப்படவேண்டும்.  இதற்கு முட்டுக் கட்டையாக சர்வதேச நாடுகளில் இயங்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் உள்ளமை கவலை தருவதாகத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.