புலம்பெயர் தமிழர் வடிக்கும் போலிச் சித்திரங்களை வடபகுதி மக்கள் பொய்ப்பிக்க முடியும்
புலம்பெயர் தமிழ் மக்கள் வடிவமைக்கும் போலிச் சித்திரங்களை வடபகுதி மக்களினாலேயே பொய்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக வடபகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளூடாக அரசியலில் பிரவேசிக்க செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பிரதான கட்சிகள் வட பகுதிக்கு செல்லுங்கள். புலம்பெயர் தமிழர்கள் வடிவமைக்கும் போலிச் சித்திரங்களை வடக்கு மக்களாலேயே பொய்ப்பிக்க முடியும். தேசிய பட்டியல் மூலம் வட பிரதேசத்திற்கு அதிக இடம்ஒதுக்கப்படல் வேண்டும்.இனப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக வட பகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளின் ஊடாக அரசியலில் பிரவேசிக்கச் செய்தல் வேண்டும்.
தமிழ் மக்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என்பன சர்வதேசத்திற்கு பொய்யான சித்திரமொன்றை வடிவமைத்துக் காட்டுகின்றன.
அவ்வாறான பொய்ப் பிரசாரங்களை வடக்கில் வாழும் மக்களால் மாத்திரமே முறியடிக்க முடியும் எனவும் அதற்காக தேசிய அரசியல் கட்சிகள் சார்பாக அவர்களுக்கு அரசியலில் பிரவேசிக்க இடமளிக்கப்பட வேண்டும். அரசாங்கம் தற்போது வடக்கிலே பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போதும் அவை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. எனினும் அதன் மூலம் அரசாங்கமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலாபம் தேடி வருகின்றது.
தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வட பகுதி மக்களிடம் செல்ல வேண்டிய கட்டாயமுள்ளது. நாட்டின் மீது பற்றும், அன்பும் உள்ள சகலரும் இது பற்றி கவனம் செலுத்துதல் வேண்டும். இதனூடாக சர்வதேச ரீதியில் நாட்டிற்கு எதிராக போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவோரின் முயற்சிகளை செயலிழக்கச் செய்ய முடியும்.
இதனை, பூநகரி பிரதேச தேர்தல் முடிவுகள் காட்டுகின்றள. மேலும் தேசியப் பட்டியல் மூலம் உறுப்பினர்களை நியமிக்கும் போது வட பிரதேசத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் தேசிய பிரச்சினை இலகுவில் தீர்வினை எட்ட முடியும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறினார்.
Post a Comment