Header Ads



பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புதிய காரணிகள் - ஆய்வில் சுவாரசிய தகவல்கள்


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கு, "மொத்த உள்நாட்டு உற்பத்தி' (ஜி.டி.பி.,) என்ற அளவீட்டு முறை மட்டும் உதவாது என, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெலிசியா ஹுப்பெர்ட் தலைமையில், ஐரோப்பாவின் 23 நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல்கள் பற்றிய ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில், 23 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 43 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

மக்கள் தங்கள் வாழ்க்கையை நல்லவிதமாக அனுபவிக்கின்றனரா என, அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஹுப்பெர்ட். இதில் "நல்லவிதமான அனுபவம்' என்பதை அவர், நல்ல மன ஆரோக்கியம் என்ற பொருளில் கூறுகிறார். மன அழுத்தம், கவலை, அதிக பதட்டம் ஆகிய மனநிலைகளுக்கு எதிரானது தான், நல்ல மன ஆரோக்கியம் அல்லது மன வளம் என அவர் விவரிக்கிறார்.

திறமை, உணர்ச்சிகளை உறுதியாகக் கையாளுதல், மன உறுதி, புரிதல், எதிர்மறையாகச் சிந்திக்காத தன்மை, நல்ல உணர்ச்சிகளை வெளிப்படுத்தல், நல்ல நட்புறவுகள், எதையும் தாங்கிக் கொள்ளுதல், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் ஆகிய 10 குணங்கள் மூலம், இந்த மன வளத்தை நாம் அறிய முடியும் என்கிறார் ஹுப்பெர்ட்.

இந்த அடிப்படையில் தான், 23 நாடுகளில் உள்ள 43 ஆயிரம் பேரிடம் பொருளாதார வளர்ச்சி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றில், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நார்டிக் நாடுகளில் உள்ள மக்கள், இந்த மன வளத்தை அதிகளவில் பெற்று முதலிடம் வகிக்கின்றனர். அதேநேரம், ஐரோப்பாவின் கிழக்கு பகுதி நாடுகளில் உள்ள மக்கள், மிகக் குறைவான மன வளத்துடன் உள்ளனர். ஆனால், உற்சாகம் என்ற குணத்தில் அவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். மொத்தத்தில் மன வளத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி நாடுகளில் உள்ள மக்கள், மன வளத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில் இந்த 10 குணங்களில், ஒவ்வொரு குணமாக ஆராய்ந்தால், ஒவ்வொரு நாடு, ஒவ்வொரு குணத்தைச் சிறப்பாக பெற்றிருக்கிறது.

பிரான்சைப் பொருத்தவரை அந்நாட்டு மக்கள் மன உறுதியில் ஐரோப்பாவில் முன்னணியில் உள்ளனர். ஆனால், தன்னம்பிக்கை, எதிர்மறையாகச் சிந்திக்காத தன்மை, நல்ல நட்புறவுகள் ஆகியவை அவர்களிடம் குறைவாக உள்ளன.

இதுகுறித்து ஹுப்பெர்ட் கூறுகையில், "மக்களின் வாழ்வைச் செழிப்பாக்க வேண்டும் என அரசியல்வாதிகள் விரும்பினால், இந்த குணங்களின் அடிப்படையிலான ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வளர்ச்சி அடையும்' என்றார்.


No comments

Powered by Blogger.