Header Ads



இஸ்லாமிய உலகின் அரசியல் - ரவூப் ஹக்கீம்

மெளலவி எஸ். எச். ஆதம்பாவா மதனி அவர்களின் "நான்கு கலிபாக்கள்" நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்ற பொழுது நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

மெளலவி எஸ்.எச். ஆதம்பாவா மதனி "நான்கு கலிபாக்கள்" என்ற நூலைப்பற்றி ஷேய்க் அகார் முஹம்மத் ஆற்றிய விமர்சன ரீதியான சிறப்பான உரையை செவிமடுக்க கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். 

இந்த நூலின் உள்ளடக்கம் சம்பந்தமாக உரையாற்றிய அவர் இதன் பின்னர் வரலாற்றை எழுத முற்படுவோர் ஒரு புதிய அணுகுமுறையை கையாள வேண்டியதன் அவசியம் பற்றி வலியு றுத்தினார். 

இஸ்லாமிய வரலாறு சம்பந்தமாக அவ்வாறான ஒரு புதிய அணுகு முறை ஏன் தேவையென பார்க்கும் போது முன்னைய இஸ்லாமிய வரலாறு வெறும் யுத்தங்களின் வரலாறாக சித்திரிக்கப்பட்டதன் விளைவாக எமது பூர்வீகம் கொச்சைப்படுத்தப்பட்டதை பார்க்க நேரிடுகின்றது என்றார்.

சமகால இஸ்லாமிய வரலாறு எழதப்படுகின்ற பொழுது அது எவ்வாறு அமைய வேண்டுமென நான் எண்ணிப் பார்த்தேன். அது யுத்தங்களின் வரலாறாக அல்லாது கிளர்ச்சிகளின் அல்லது மக்கள் எழுச்சிகளின் வரலாறாக எழுதப்படப் போகின்றது. ஆனால் அதை உண்மையிலேயே மக்கள் எழுச்சிகளா அல்லது வெளிச் சக்திகளால் தூண்டப்பட்ட சதிப் புரட்சிகளா? என்பதைப் பற்றிய ஒரு சரியான பார்வை வேண்டும்.

எனவே, எதிர்காலத்தின் வரலாற்று ஆசிரியர்கள் அவ்வாறான சம்பவங்களை பதிவு செய்கின்ற பொழுது அதற்கான சரியான உண்மைகளை நாம் தேடிக் கண்டறிந்து கொள்ளலாம். ஏனெனில் சமகால இஸ்லாமிய உலகின் நிகழ்வுகளை உற்று நோக்குகின்ற பொழுது அல்லது அதனால் ஏற்படு கின்ற அதிர்வுகளைப் பார்க்கின்ற பொழுது நாம் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்தப் பின்னணியை சரிவர புரிந்து கொள்ளாமல் மேற்குலக ஊடகங்கள் சொல்கின்றவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்கின்ற எங்களுக்கு அவ்வாறான சில ஊடகங்கள் தங்களது நடுநிலைத் தன்மையை இழந்து வருகின்ற ஒரு நிலைமையை நன்கு அவதானிக்க முடிகின்றது. இதனை நாம் அண்மைக் காலமாக நிதர்சனமாகக் கண்டு வருகிறோம்.

சதாம் ஹுசைனுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் யுத்தம் செய்த பொழுது இங்கு நடந்த ஆர்ப்பாட்டங்களில் நானும் முன்னணியில் நின்றேன். ஏனென்றால் உணர்வு ரீதியாக அதனால் நாம் பாதிக்கப்பட்டிருந்தோம். சதாம் ஹுஸைன் சொல்லி அல்லது அவரது அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காக இந்நாட்டு முஸ்லிம்கள் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய முன்வரவில்லை. 

உண்மையை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அது தெரியும். அவருடைய அரசியல் கோட்பாடு அல்லது அவர் நீண்ட காலம் ஆட்சியில் நீடித்தார் என்பதை விடவும், ஓர் இஸ்லாமிய நாட்டின் மீது மூர்க்கத்தனமாக மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் மிகப்பெரிய விஷயமாக எங்களால் நோக்கப்பட்டது.

ஆனால், இன்றுள்ள சூழ்நிலையில் இங்கிருக்கும் எந்த அமைப்பாவது இவ்வாறான நிகழ்வுகள் அரபுலகில் அல்லது இஸ்லாமிய உலகில் நிகழும் பொழுது அவற்றுக்கு எதிராக பெரிதாக எதையும் செய்ததாக இல்லை. லிபியத் தலைவர் கேர்ணல் கடாபி விடயத்தில் இதனை நாம் அவதானிக்க முடிந்தது.

அத்துடன் உண்மை எதுவென பார்க்கப்போனால் மேற்குலக நாட்டார் எங்கெங்கெல்லாம் கை வைக்கின்றன. இன்னும் எங்கெங்கு அவை கை வைக்கப் போகின்றன என்று பார்த்தால் இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலனுள்ள இஸ்லாமிய நாடுகள் தான் அவர்களின் கண்களுக் குத் தென்படுகின்றன. 

பஹ்ரேனையோ, யெமனையோ, பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஆங்காங்கே கொஞ்சம் அங்கும் இங்குமாக சலசலப்பு ஏற்பட்டது. எகிப்தில் புரட்சி ஓய்ந்து தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அங்கு 'இஹ்வானுல்' முஸ்லிம்கள் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள் என்ற விடயம் இப்பொழுது மிகவும் விமர்சையாகப் பேசப்படுகின்றது. 

ஓரளவு எதிர்பார்க்கப் பட்ட விடயமாக இருந்தாலும் கூட, இந்த புதிய நிலவரம் முன்பிருந்ததை விட வேறுபட்ட விபரீதத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பீதியை அதற்கு வித்திட்ட சக்திகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு மத்தியில் தான் சிரியாவில் நடக்கின்ற கிளர்ச்சியைப் பார்க்கிறோம். 

அண்மைக்காலமாக எல்லாவற்றிலும் உண்மையில் சூத்திரதாரி யாரென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். சியோனிஸ்டுக்களின் திட்டங்கள் என்ன என்பன பற்றி நாம் குறிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஹமாஸ் சிரியாவிலிருந்து தங்களது இருப்பிடங்களை வேறெங்காவது மாற்றி விடலாமா என திட்டமிடுவதாக பேசப்படுகின்றது.

பலஸ்தீனர்களுடைய தற்போதைய நிலைமைக்கு பலஸ்தீன் கிளர்ச்சிவாதிகளுக்கிடையில் ஏற்பட்ட பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓரளவுக்கு பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும், ஹமாஸ¤க்கும் இடையிலான இணைவு சாத்தியமாகப் போகிறதா என்று கதைப்படும் பின்னணியில் ஹமாஸ் என்னும் அமைப்பு ஈரானிய அரசின் அனுசரணையையும், அனுக்கிரகத்தையும் பெற்றுள்ள இயக்கம் என்றிருந்தாலும் கூட, முழுக்க முழுக்க அதுவோர் சுன்னி அமைப்பு என்பது எல்லோருக் கும் தெரிந்த விடயமாகும்.

தங்களது இயக்கத்தின் உயிர் வாழ்வுக்காக அவர்கள் ஏதாவது ஓர் உபாயத்தை கையாள வேண்டி இருக்கிறது. ஏனென்றால், உயிர் வாழ்வுக்கான அரசியல் (Survival Politics)  என்பது இங்கு சிறிய கட்சிகளான எங்கள் கட்சி போன்றவற்றையே பெரிய சோதனைகளுக்குள் தள்ளியுள்ளது. உயிர் வாழ்வதற்கான அரசியலைப் பொறுத்தவரை ஈரானை விட்டும் சற்று தூரப்பட்டால் என்ன என ஹமாஸ் சிந்திக்கத் தலைப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட ஆரம்பித்துள்ளன.

சிரியாவை விட்டு தங்களது தலைமையை றேறெங்காவது கொண்டு சென்றால் என்ன, அதாவது கட்டாருக்குக் கொண்டு சென்றால் என்ன என அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈராக்கில் யுத்தம் நடந்த போது, ஒருவிதமான முகத்தோற்றத்தை முழு உலகிற்கும் காட்டி அப்பாடா! நடுநிலை வழுவாத ஓர் ஊடகத்தை அடைந்து விட்டோம் என்ற மகிழ்ச் சிப் பிரவாகத்திலே நீதிநியாயத்தை பேணும் மக்களை ஆழ்த்திய அல் ஜkரா கூட, ஒளிபரப்புகின்ற செய்திகளைப் பார்க்கின்ற பொழுது அவ்வாறான எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் சுக்கு நூறாக அல்லது தவிடுபொடியாக ஆகிப்போகின்ற அவலத்தைப் பார்க்கிறோம்.

எடுத்த எடுப்பிலேயே நாங்கள் செய்திகளால் அள்ளுண்டு போகாமல் கொஞ்சம் ஆற அமர நின்று பார்த்தால் தான் உண்மை தெரியும் என்ற அளவுக்கு இன்று சமகால இஸ்லாமிய உலகின் அரசியல் ஆகிவிட்டிருக்கிறது.

நாங்கள் அணுகக் கூடிய ஷேய்க் அகார் முஹம்மத் போன்ற உலமாக்கள் அவ்வப்போது பிரச்சினைகள் எழும் பொழுது அவர்களை நாம் அணுகினால் வரலாற்றிலிருந்தும், ஷரிஆவிலிருந்தும் தகுந்த முன் உதாரணங்களை வைத்து எங்களுக்கு உரிய விளக்கங்களை அளிப்பதோடு அவற்றுக்கான தீர்வு களையும் முன் வைப்பது வழக்கம்.

எனக்கு இன்றுபோல் ஞாபகமிருக் கிறது. எமது கட்சிக்குள் ஒரு சமயம் உடைவு ஏற்பட்ட பொழுது நான் அகஸ்மாத்தாக ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களை சந்திக்கப் போயிருந்தேன். 

அப்பொழுது அவர் என்னிடம் ஒரு விடயத்தைச் சொன்னார். தற்செயலாக மாவனல்லையில் உள்ள அவருடைய வீட்டுக்குப் போன போது அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட விடயம் அது. அதாவது, யசீதுடைய வரலாறு அது சம்பந்தமாக வித்தியாசமான பார்வை இருந்தாலும் அதிலொரு படிப்பினை இருக்கிறது. 'உங்களுடைய அணியிலே இருப்பவர்களுக்கு பைஅத் உடைய தாற்பரியம் குறித்து நீங்கள் எதுவும் சொல்வதில்லையா? ஏன் இவ்வாறெல்லாம் நடக்கின்றன? அதற்காக இயலுமானால் உங்களது உறுப்பினர்கள் அனைவரயும் கூட்டி உலமாக்களாகிய நாங்கள் சந்தித்து அதற்கான விளக்கங்களை அளித்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்தலாம் அல்லா?" என்றார்.

அவர் சொன்ன உதாரணம் யசீத் சம்பந்தப்பட்டது. அதாவது, அவருக்கு கிலாபத் சேரப்போகிறது என்கின்ற நிலைமையில், அந்தக் கிலாபத்தில் அவருக்கு பைஅத் செய்தவர்கள் அவரது குணநலன்களை அறிந்தும், அறியாமலும் அவருக்கு பைஅத் செய்தவர்களென நிறையப் பேர் இருந்தார்கள். 

சஹாபாக்கள் சிலரும் அவர்களில் இருப்பதாகக் கூறப்பட்டது. யசீதுக்கு எதிரான கிளர்ச்சிக்காக ஆட்களைத் திரட்டுகின்ற வேலை நடந்த போது பைஅத் செய்த சிலர் அதில் இணைய மறுத்து விட்டார்கள். அவரது ஆட்சி கொடுங்கோண்மை ஆக இருக்கப் போகிறது என தெரிந்து இருந்தாலும் கூட, "நாம் பைஅத் செய்து விட்டோம். 

எனவே அவருக்கு எதிரான கிளர்ச்சியில் நாங்கள் ஈடுபட முடியாது" என்று கூறி அவர்கள் தவிர்ந்து கொண்டார்கள் என்ற விஷயத்தை ஷேய்க் அகார் என்னிடம் சுட்டிக்காட்டினார். பைஅத் உடைய மகிமை எத்தகையது என்பதை உணர்த்துவதற்காக அவர் என்னிடம் அதனை எடுத்துக்காட்டினார். இதனை எனது கட்சிக் கூட்டங்களில் பல தடவைகள் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

எனவே, அதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் தலைமைத்துவம் என்ற அடிப்படையில் நாங்கள் சில முடிவுகளை அதாவது மஷ¥ராக்களை எடுக்கின்ற பொழுது ஏற்படக் கூடிய விபரீதங்களைப் பற்றி எங்களுக்குத் தான் தெரியும். ஏனென்றால் அவ்வாறான முடிவொன்றை எடுத்த பின்னர் அதனை உறுப்பினர்களும், மக்களும் ஏற்றுக்கொள்வார்களா? அதனால் குழப்பங்கள் ஏதும் விளைந்து விடுமா? என்ற தடுமாற்றம் ஏற்படுகின்ற பொழுது ஆதம் பாவா மதனி, பாலமுனை ஹாஷிம் மெளலவி போன்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உலமாக்களோடு கலந்தாலோசிப்பது உண்டு. 

ஏனென்றால் நான் தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறையில் களமிறங்கப் போகிறேன் என அந்த உலமாக்களிடம் கூறினேன். அன்றுள்ள சூழலை வைத்து மஷ¥ரா செய்துவிட்டு சென்ற அவர்கள் மறுநாள் திரும்பி வந்து அதற்கு ஒப்புதல் அளித்தார்கள். அதனோடு தொடர்புபட்டதாக ஒரு வரலாற்று சம்பவத்தையும் கூறினார்கள்.

அதாவது அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு ஒரு தடுமாற்ற நிலை ஏற்பட்டது. நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு, பொய் நபிமார்களின் பித்தலாட்டம் தோற்றம் பெற்ற போது, குழப்ப நிலைக்கு மத்தியில் ஷாம் எனப்படும் சிரியாவுக்கு படையனுப்புவது தொடர்பில், உசாமா (ரலி) என்ற பதினேழு வயது இளைஞர் தலைமையில் அதனை அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை மாற்றுவதற்கு அபூபக்கர் சித்தீக் (ரலி) மறுத்துவிட்டார். மஷ¥ரா செய்து எடுத்த முடிவை தான் மாற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள்.

மதீனாவில் எல்லா இடத்திலும் பொய் நபிமார் என்று அட்டகாசம் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பம் அது. கிலாபத்தே ஆட்டம் காணக்கூடிய நிலையில் நீங்கள் இந்த இளைஞரின் தலைமையில் ஷாம் தேசத்துக்கு படையனுப்பும் முயற்சியை கைவிட வேண்டும் எனக் கேட்கப்பட்டது. அம்ர்இப்னுஆஸ் போன்ற தலைசிறந்தவர்கள் இருக்கின்ற போது, இந்த இளைஞரின் தலைமையில் படையை நகர்த்துவதா, எனக் கூறப்பட்டது. ஆனால், எடுத்த மஷ¥ராவை மாற்ற மறுத்தது மட்டுமல்ல, அந்த மஷ¥ரா சரியாக மேற்கொள்ளப்பட்டது. என்ற காரணத்தினால் குழப்பம் ஒருவாறு எப்படியோ அடங்கிவிட்டது. 

ஷாம் தேசம் வெற்றிகொள்ளப்பட்டது. அதற்கு புகஹாக்கள் இன்னும் விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். ஏனென்றால் நான் அவசரமாக சில முடிவுகளை மேற்கொண்டு அதனால், விபரீதம் வருமென்று யோசிக்காமல், அதில் ஏதோ நன்மை இருக்கலாம் என உலமாக்கள் தைரியமூட்டி அதற்கு மேற்கோள் காட்டுகின்ற விடயங்கள் நிறைய உள்ளன. 

எனவே, இவ்வாறான நூல்களின் ஊடாக அவ்வப்போது வரலாற்று நிகழ்வுகளை உற்றுநோக்கப்படுவதும், வெறும் அரசியல் தலைமைகளின் பார்வையில், மாத்திரமே அல்லாமல், பல்வேறு கோணங்களில் இஸ்லாமிய கிலாபத் சம்பந்தப்பட்ட விடயங்கள் அணுகப்பட வேண்டியது மட்டுமல்லா மல், பரவலாக ஆராயப்பட வேண்டிய விடயங்களை இட்டு நாம் சிந்தனையை செலுத்துவது பயனுடையது.

நண்பர் மெளலவி எஸ். எச். ஆதம்பாவா மதனி இஸ்லாமிய வரலாற்றை நன்கு கற்றுத் தேர்ந்தவர் மட்டமல்லர் ஆய்விலும் ஈடுபட்டவர். பொதுவாக ஆங்கிலம் போன்ற மொழிகளில் இருந்து அநேகமாக திரிபுபடுத்தப்பட்ட வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமது நூல்களை, இயற்றாது மூல மொழியான அரபியிலிருந்தே நூல்களை யாப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதும், உண்மைத் தன்மையை பிரதிபலிக்கத்தக்கதுமாகும்.


No comments

Powered by Blogger.