பாகிஸ்தானில் அரசாங்கம் இராணுவம் மோதல் தீவிரம் - உதவிக்கு தயாராகும் சீனா

பாகிஸ்தான் ராணுவம் மீது அதிருப்தி கொண்டுள்ள அரசு, ராணுவத் தளபதி கயானியையும், ஐ.எஸ்.ஐ., தலைவர் பாஷாவையும் பதவி நீக்கம் செய்வது குறித்து, ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எந்தச் சூழலிலும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக, சீனா உறுதியளித்துள்ளது.
பாகிஸ்தானில் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி, ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, இருவரின் பதவிக் காலங்களும், ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளன. கயானிக்கு, 2013 நவம்பர் வரையும், பாஷாவுக்கு அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையும், பதவி நீடிக்கும். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும், அரசுக்கும் இடையிலான மோதல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அரசுக்கு எதிராக இருவர் : அமெரிக்காவிற்கு எதிரான பாகிஸ்தானின் சமீபத்திய உறுதியான நிலைப்பாட்டுக்கு, இவர்கள் இருவரும் தான் காரணம் என, அமெரிக்கா கருதுகிறது. அதேபோல், மெமோகேட் விவகாரத்தில், அதிபருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும், தம்மிடம் இருப்பதாக, இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளனர்.
அதோடு, மெமோகேட் விவகாரத்தில், முழுமையான விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்த இரு விவகாரங்களால் தான், அரசுக்கும், இவர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. ராணுவத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு, அமெரிக்காவின் மறைமுக ஆசிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி நீக்கம்? : அதனால், இவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்வது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. ஆளும் பாக்., மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும், இவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம், அரசின் முடிவை எதிர்த்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரம் இல்லை : ஆனால், இவர்களைப் பதவி நீக்குவதற்கு, பாக்., அரசியல் அமைப்புச் சட்டம், பிரதமருக்கு அதிகாரம் அளிக்கவில்லை என, சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பும், இதேபோன்ற விவகாரங்களில், பிரதமரின் முடிவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது என, அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எரிச்சலைத் தூண்டும் அரசு : இதற்கிடையில், மெமேகோட் விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி, ராணுவச் செயலர் காலித் நயீம் லோதிக்கு, அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர், கயானிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 21ம் தேதி, இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்த லோதி, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு, ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.,யைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்திருந்தார். லோதிக்கு, அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம், ராணுவத்தை மேலும் எரிச்சல்படுத்தும் எனத் தெரிகிறது.
தப்பியோடும் சர்தாரி : இந்நிலையில், மெமோகேட் விவகாரத்தில், அதிபர் சர்தாரி, சுப்ரீம் கோர்ட்டில் பதிலளிக்கத் தேவையில்லை என, அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாக்., அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அதிபருக்கு சட்டரீதியான பாதுகாப்பு இருப்பதால், அவர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.
ஆனால், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி, அதிபருக்கு அவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாது எனவும், அதுபோன்ற பாதுகாப்பு இருக்கிறதா என்பதை, சுப்ரீம் கோர்ட் தான் சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சீனா ஆதரவு : பாகிஸ்தானின் மிக இக்கட்டான இச்சூழலில், கடந்த வாரம், அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட சீன உயர் அதிகாரி டாய் பிங்குவோ, எந்தவிதமான சூழலிலும் சீனா, பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் என உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24ம்தேதி, தனது இருநாள் பயணத்தை முடித்துக் கொண்ட அவர், சர்வதேச நிலவரங்களால், பாகிஸ்தானில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் பாதுகாப்பது தான், சீனாவின் கொள்கை என தெரிவித்துள்ளார்.
Post a Comment