Header Ads



நியாயம் கிடைக்கும் என பாக்கிஸ்தான் மீது, இலங்கை வைத்துள்ள நம்பிக்கை இயன்றளவு உறுதி செய்யப்படும் - இம்ரான்கான்


‘கொடூர கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை…’

பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளிப்பு…

இதுவரை 113பேர் கைது…

நியாயம் கிடைக்கும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் மீது இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கை, இயன்றளவு உறுதி செய்யப்படும்…

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது…

பாக்கிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்துகொண்டிருந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாக்கிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்செயலுடன் தொடர்புடைய அனைத்து வீடியோக் காட்சிகள் மற்றும் தகவல்கள், தற்போது பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 113 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும், பாக்கிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாகப் பாக்கிஸ்தானில் தொழில்புரிந்த இலங்கையரான பிரியந்த குமார, ஒரு முகாமையாளராக உயர் தொழில் திறமையைக் காட்டியவர் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு கடவுளின் மன்னிப்பு இல்லை என்றும் சட்டத்திலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காதென்றும் தெரிவித்த பிரதமர், நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

04.12.2021

No comments

Powered by Blogger.