Header Ads



உலக நாடுகள் மாற்று அரச தலைவராக சஜித்தை ஏற்றுக்கொண்டுள்ளன - 2 சம்பவங்களை விபரிக்கும் எதிர்க்கட்சி Mp


"இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கையில் மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தியையும், மாற்று அரச தலைவராக சஜித் பிரேமதாஸவையும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும், அதனால் தான் சீனா சஜித்துக்கு உதவுகின்றது, இந்தியாவும் அவருடன் பேச்சு நடத்துகின்றது" என ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

"இந்த அரசு மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் கடன் வழங்குவதற்கு நாடுகள் முன்வர மறுக்கின்றன. நிதி தொடர்பான தரவுப் பட்டியல்களில் எமது நாடு தொடர்ச்சியாகப் பின்நிலைப்படுத்தப்படுகின்றது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

எனினும், உலக நாடுகள் ஐக்கிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து அதனை மாற்று அரசாகவும், அதன் தலைவர் சஜித் பிரேமதாஸசவை மாற்று அரச தலைவராகவும் ஏற்று வருகின்றன. அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கையை ஏற்று 20 மில்லியன் ரூபா நன்கொடையை சீனா வழங்கியது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா சென்று கடன் கேட்டார். அதனை வழங்கலாமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் சஜித்தைத் தொடர்புகொண்டு கேட்கின்றனர். அதாவது உலக நாடுகள் மாற்றுத் தலைவராக சஜித்தை ஏற்றுள்ளன என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. இது தெளிவாக புரிகின்றது.

சஜித் பிரேமதாஸ மனிதநேய மிக்க தலைவர். அதனால்தான் எதிரணியில் இரும்கும் போதும் மக்களுக்கு உதவுகின்றார். நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. சகல துறைகளையும் உள்ளடக்கிய தீர்வுத் திட்டம் விரைவில் முன்வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.  

1 comment:

Powered by Blogger.