Header Ads



முஸ்லிம்களை குறிவைத்த ஞானசாரருக்கு, ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பதவியில் அமர்த்துவதா..? SJB கண்டனம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் மற்றுமொரு ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது. ஒரே நாடு,ஒரே சட்டம் என்பதற்காக அவர் நியமித்த செயலணி கேலிக்கூத்தான ஒரு செயலணி என்றே சொல்ல வேண்டும். இந்த செயலணியின் தலைவராக சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை ஆணைக்குழுவின் நோக்கங்களை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். எந்தவொரு குடிமகனும் இனம், மதம், சாதி அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் சட்டத்தில் எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தப்படக்கூடாது என்று ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்பட்ட நடைமுறைக் கோவை கூறுகிறது.

கடந்த காலங்களில் சங்கைக்குரிய கலகொட அத்தே தேரர் எவ்வாறு செயற்பட்டார் என்பதை இந்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.முஸ்லிம்களை குறிவைத்து அவர் வெளியிட்ட அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் வைத்து நாட்டில் ஏற்படுத்திய நிலையை தர்கா நகரின் நிகழ்விலயே தெரிந்தது.சட்ட மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கலகொட அத்தே தேரர், திருமதி சந்தியா எக்னலிகொடவிற்கு நீதிமன்றத்திற்குள் கூறிய கருத்துக்கு, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைவாச தன்டனைக்குட்பட்டு ஜனாதிபதி மன்னிப்பளிக்கப்பட்ட நபராவார்.

சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கும் சட்டத்தின் பாதுகாப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நியமிக்கப்பட்ட செயலணிக்கு சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்திருப்பது நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும்.

இந்த ஆணைக்குழுவின் நியமனத்தின் இரண்டாவது நகைச்சுவை என்னவென்றால், ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து செல்லும் போது நடவடிக்கை எடுத்ததாகும்.ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் முதல் வாக்குறுதியாக இருந்தது ஒரே நாடு,ஒரே சட்டம் என்பதே. இருபதாம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைய அனுமதித்தது,தான் விரும்பும் நபர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கும் மோசமான அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காகவே என்று நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட தண்டனைகளை மாற்ற நடவடிக்கை எடுப்பது, அந்த ஆணைக்குழுவின் ஊடாக விசாரணை அதிகாரிகளை குற்றவாளியாக்கும் முயற்சியில்,சட்டத்தின் ஆட்சியையே கேலிக்கூத்தாக்கிய,சட்டத்தின் ஆட்சிக்கே கூட சவாலாக விளங்கிய ஆட்சியாளர்கள், இப்போது தான் விழித்துக் கொண்டது போல, இந்த செயணியை ஸ்தாபித்தது நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுக்குமில்லை.

இவ்வாறானதொரு செயலணிக்கு நாட்டின் இரண்டாவது பெரிய சனத்தொகையான தமிழ் மக்கள் மற்றும் பெண்களின் பிரதிநித்துவம் இல்லாமை என்பது பாரிய பிரச்சினையாகும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் வெட்கமில்லாமல் இருந்து வருகின்றது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



ரன்சித் மத்தும பண்டார

பொதுச் செயலாளர்

ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.