Header Ads



ஹம்பாந்தோட்டை மேயர் பம்பலப்பிட்டியில் ரவுடித்தனம், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நிலங்களை பிடிப்பதாகவும் குற்றச்சாட்டு


ஹம்பாந்தோட்டை மேயர் பம்பலப்பிட்டிய பகுதியில் காணியொன்றின் காவல் பணியாளர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பம்பலப்பிட்டிய – கொத்தலாவல அவன்யூவிலுள்ள காணியொன்றுக்கு இருவேறு தரப்பினர் காவலாளிகளை பணிக்கமர்த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் குறித்த காணிக்கு சென்ற ஹம்பாந்தோட்டை மேயர், எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ அங்கிருந்த காவல் பணியாளர்களை தாக்கியதாக பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மேயர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (14) இரவு பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல அவன்யூவில் உள்ள காணிக்குள் புகுந்து இரண்டு தனியார் காவல் பணியாளர்களை தாக்கியதாக பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

SUV வாகனத்தில் சிலருடன் சென்ற மேயர், காவல் பணியாளர்களை தகாக வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

குறித்த காணி தொடர்பில் வழக்கு ஒன்று இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியதற்காக எராஜ் பெர்னாண்டோ சிறைத்தண்டனை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டில் மத்தளை விமான நிலையத்திற்கு சோதனை நடவடிக்கைகளுக்காக சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தாம் வைத்திருந்தது போலி துப்பாக்கி என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ மீது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Newsfirst

No comments

Powered by Blogger.