Header Ads



தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிடாதது மனவருத்தத்தைத் தருகின்றது - விக்னேஸ்வரன்


தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தமது அறிக்கையில் குறிப்பிடாதது மனவருத்தத்தைத் தருவதாக நடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள்  பற்றி அவர் குறிப்பிடாதது மனவருத்தத்தைத் தருகின்றது. எமது காணிகளை அரசாங்கம் தந்திரமாகவும் பலாத்காரமாகவும் கையேற்பது பற்றி அவர் எதனையும் குறிப்பிடப்படவில்லை. 

அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திற்கு முன்னர் இவை பற்றி முழு விபரங்களை நாம் சேகரித்து அனுப்ப வேண்டும். எனினும் பல முக்கிய விடயங்களை அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

மக்களை வேவு பார்ப்பது அவர்களை அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை மீறல் செயற்பாட்டாளர்களை, பத்திரிகையாளர்களை, காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினரைக் குறிவைத்து அவர்களை நீதிமன்றில் நிறுத்துவது போன்ற செயற்பாடு தற்போது விரிவடைந்துள்ளது. 

தற்போது. மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும்  மதத் தலைவர்களையும் அரசாங்கம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது என்பதைக் கூறியுள்ளார்.

மேலும் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் குறித்து பேச்சளவில் இல்லாது நடைமுறையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை உடனே தற்காலிகமாகவேனும் செயலிழக்க வைக்க வேண்டும். அத்துடன், 2019 ஏப்ரல் 21 தாக்குதல் சம்பந்தமான சூத்திரதாரிகளை உடனே கண்டுபிடித்து உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு பல விடயங்களை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் பொருள்படக் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு சார்பாகவும் பேசி தொடர்ந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் அவசியமான செயற்பாடுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் கூறப்படாமல் விட்டாலும் தற்போதைக்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். அரசாங்கமும் வேறு வழியின்றி அதற்கு இசைந்துள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.