Header Ads



தாலிபன்கள் குறித்து முதன்முதலாக வாயைத் திறந்தது சவுதி அரேபியா - BBC News


ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் இடைக்கால அரசு குறித்து முதல் முறையாக செளதி அரேபியா கருத்து தெரிவித்துள்ளது.

"தாலிபன்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பணியாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரும் இளவரசருமான ஃபைசல் பின் ஃபர்ஹான் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் பற்றிய ஒரு மெய்நிகர் கூட்டத்தில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான் தொடர்பான தமது அரசின் நிலையை தெளிவுபடுத்தினார்.

" இடைக்கால அரசு சரியான திசையில் செயல்படும் என்றும் மக்களை வன்முறை மற்றும் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கும் என்றும் செளதி அரேபியா நம்புகிறது ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று செளதி அரேபியா நம்புகிறது," என்று அவர் கூறினார்.

தமது நாடு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் என்று இளவரசர் ஃபைசல் கூறியதாக செளதி பிரஸ் என்ற அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுடன் தமது நாடு நிற்கும். ஆப்கானிஸ்தானை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு செளதி அரேபியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று இளவரசர் பைசல் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பது யார் என்ற விவரத்தை தாலிபன் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது. அந்த அரசில், முல்லா முகம்மது ஹசன் அகுந்த் பிரதமராகவும், அப்துல் கனீ பராதர் துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.