Header Ads



சிறுவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் - ஜனாதிபதி பணிப்பு


சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

சிறுவர்களை வேலைக்கமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் தோட்டப் பகுதி பிள்ளைகள் என்றும் இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்குத் தேவையான அதிகாரம், கிராம அதிகாரி மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள், கிராம அதிகாரிகளிடம் உள்ளன. வீடொன்றில் பிள்ளை ஒருவர் இல்லாமல் போவது பற்றி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அது பற்றி உடனடியாகச் செயற்பட்டு, சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி தெரிவித்தார். 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக்கு “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு, தனியான இராஜாங்க அமைச்சு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

சிறுவர் மற்றும் மகளிர் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு, இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், வேறு நாடுகளில் சிறுவர் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் படித்து, நகர மற்றும் கிராமிய மட்டத்தில் அந்த முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார். 

முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்விகள், அனைத்துப் பிள்ளைகளுக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பாதிருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த பிள்ளைகளை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் ஆன்மீகப் பண்புகளின் ஊடாக, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பினை பலப்படுத்த முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

சேவை நிலையங்கள் ரீதியாக, பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து அறிவூட்டுதல், தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்துதல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படக் கூடும் என சந்தேகப்படக்கூடிய பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் குறித்து முற்கூட்டியே அறிந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

1 comment:

  1. முதலில் சிறுவர்கள் உள்ள குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை சீராக்க தீவிர நடவடிக்ைக எடுங்கள். அதன்விளைவாக குடும்ப நிலைமைகள் சீராக அமைந்தால் யாரும் அவர்களுடைய பிள்ளைகளை வௌியில் வேலைக்கு அனுப்பமாட்டார்கள். பிரச்சினை தீர்ந்தது. அதைவிட்டு வெறுமனே சட்டத்தால் தடுக்கக்கூடிய விடயமாக இது தென்படவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.