Header Ads



காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம் - மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - பைடன் சபதம்


காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

வியாழக்கிழமையன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 140-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

"இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். பதிலடி கொடுப்போம்" என்று அவர் கூறினார்.

காபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.

உள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணியளவில் விமான நிலையத்தின் அப்பி நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த விமான நிலையத்துக்கு அருகேயுள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.

தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் அளவுக்கதிகமான கூட்டம் இருந்தது. விமான நிலையத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்ற ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் கூட்டம் குறையவில்லை.

"பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் தடுக்க முடியாது" என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.

தாலிபன்கள் திறந்துவிட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறிய ஐஸ்எஸ்ஐஎஸ்-கே என்ற பயங்கரவாத இயக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.

"மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து செய்வோம்" என்றார் அவர்.

மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.

"பிறரது உயிரைக் காப்பாற்றும் தன்னல நோக்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஹீரோக்கள் " என்று பைடன் புகழாரம் சூட்டினார்.

காபூலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கே இயக்கத்தினரால் இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து தாலிபன்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அமெரிக்க மத்தியப் படைப்பிரிவின் தலைவர் பிராங்க் மெக்கென்சி கூறினார்.

ஆனால் இந்த தாக்குதல் 31 ஆகஸ்ட் காலக்கெடுவுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் முயற்சியை சிக்கலாக்கியிருக்கிறது.

காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க வீரர்களும் சுமார் 1000 பிரிட்டன் வீரர்களும் உள்ளனர்.

இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் சுமார் 5,000 பேர் இன்னும் காத்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட பிறகும் சோதனைச் சாவடிகளைக் கடந்து விமான நிலையத்துக்குள் வர ஆயிரக் கணக்கானோர் முயற்சி செய்து வருகின்றனர்.

கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.

விமான நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்களது மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என்று குறிப்பிட்டார்.

2 comments:

  1. இந்த தாலிபான்கள் எந்த காட்டுமிராண்டிகள் என்பது விளங்கவில்லை. ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்துடன் ஆகஸ்ட் 31 திகதிக்கு முன் வௌியேறும் உடன்படிக்கை இணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களை கொலை செய்யும் இந்த அரக்கத்தனம் எங்கிருந்து வ்ந்தது, தயவு செய்து இந்த மூதேவிகளின் செயல்பாட்டை இஸ்லாம்,முஸ்லிம்களுடன் மட்டும் இணைத்துப் பார்க்க வேண்டாம். இவன்கள் பயங்கரவாதிகள் என தன்னையே நிரூபித்துவிட்டார்கள்.

    ReplyDelete
  2. அப்ப அமெரிக்க இந்திய போர் நடக்கும் ஆனால் நடக்க விடாமல் இஷ்ரேல் தடுக்குமே. உண்மை இதுதான் இருந்தும் உலகிற்கு உண்மை தெரியாமல் இருக்க இஷ்ரேல் தயாரித்த நாடகங்கள் அனைத்து அக்கிரமங்களும் இஷரேலின் ஆயுட்கால பங்காளி களே அராஜக அரக்கன் அமெரிக்கா மற்றும் இனவெறி யில் தீமிதித்தாடும் தெற்காசிய வன்முறை அரசன் இந்தியா. இந்நிலையில் இம்மூர்த்திகளுக்கும் தீனிபோடுபவர்களே நம்ம நாயன்மாரான மத்தியகிழக்கின் கிழட்டு மன்னர்களும் அவர்களின் வம்பு இளவரசர்களும். இறுதியில் நம்ம ஏழை நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பிச்சைக்காக கையேந்த வேண்டிய நிலை.

    ReplyDelete

Powered by Blogger.