Header Ads



துபாய் செல்லவிருந்த இலங்கை பணியாளர்களுக்கு நெருக்கடி


ஆகஸ்ட் 6 ஆம்திகதி முதல் முன்னெடுக்கப்படவிருந்த, துபாய்க்கான அனைத்து விமானப் பயணங்களும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

துபாய் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கோரப்பட்டிருந்த தகைமைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பூர்த்தி செய்ய தவறியிருந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை ஆகஸ்ட் 5 முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் நீக்கியிருந்தது. 

அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொழிலுக்காகச் செல்லவிருந்த இலங்கையர்கள் உட்பட மேலும் சில ஆசிய நாட்டவர்களுக்கு மீண்டும் அந்நாட்டுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. 

எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொழில் நிமித்தம் வருகைதரும் அனைவரும் ரெபிட் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான பெறுபேற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் புதிய நிபந்தனை ஒன்றை உள்ளடக்கியுள்ளது. 

எனினும், இந்த ரெபிட் பி.சி.ஆர் வசதிகள் இன்னமும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

இறுதி தருணத்தில் அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனையால் துபாய் நோக்கிப் புறப்படவிருந்த பெரும்பாலான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக துபாய் பயணமாகவிருந்த பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை காரணமாக தற்போது துபாய் நோக்கி தொழிலுக்கான செல்லவிருந்த எவருக்கும் அங்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

அவ்வாறே, 3 மாதங்களுக்கு அதிகமான காலம் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லமுடியாமல் இலங்கை பணியாளர்களில் பெரும்பாலானோர் இன்று மற்றும் நாளை துபாய் செல்ல விமான பயணச்சீட்டுகளையும் பெற்றிருந்தனர். 

எனினும், இந்த திடீர் உத்தரவினால் தற்போது அவர்கள் தமது தொழில் வாய்ப்பை இழக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மாற்றுவழியாக இலங்கை விமான சேவை பிரதிநிதிகள் இரண்டு யோசனைகளை முன்வைத்துள்ளனர். 

அதில் ஒன்று மாலைத்தீவு ஊடாக துபாய் பயணிப்பதாகும். இரண்டாவது யோசனை ஜோர்ஜியா ஊடாக துபாய் செல்வதாகும். மேற்படி இரு நாடுகளில் துபாய் அதிகாரிகள் கோரும் ரெபிட் பிசிஆர் வசதிகள் காணப்படுகிறது. 

எனினும்,இந்த மாற்று யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதும், அதிக செலவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

இந்த இரு பயணங்களுக்காகவும், பயணிகள் தமது பயணக்கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டிய ஏற்படுகிறது. 

எனவே, இது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி தமக்கு உரிய தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு வெளிநாட்டுப் பணியாளர்கள் கோருகின்றனர்.

No comments

Powered by Blogger.