Header Ads



மொத்த விற்பனை நிலையங்களை எக்காரணம் கொண்டும் மூடவேண்டாம் - பந்துல


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நகரங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மொத்த விற்பனை நிலையங்களை  மூட வேண்டாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவற்றை நாட்டு மக்களின் நன்மை கருதி தொடர்ந்தும் திறந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வர்த்தக அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து விற் பனை செய்யும் கேந்திர நிலையமாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாலும் அல்லது துறைமுக சேவைகள் இடை நிறுத்தப்பட்டாலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விநியோகம் இன்றி தேக்கமடையும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் விளைவால் அத்தியாவசியப் பொருட்களுக்கான கேள்விகள் அதிகரித்து அவற்றின் விலைகள் வேகமாக அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் கெய்ஸர் வீதி உட்பட நாடளாவிய ரீதியில் நேற்று வரை 25-க்கும் மேற்பட்ட வர்த்தக நகரங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு வர்த்தக நகரங்கள் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டு வருகின்றன. கொழும்பு புறக்கோட்டையின் சில பகுதிகள் உட்பட திருகோணமலை, அம்பாறை, இரத்தினபுரி, பலாங்கொடை, வெளிமடை உள்ளிட்ட மேலும் சில நகரங்களை மூடுவதற்கு அங்குள்ள வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.